தமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..!

0 1020

எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தமிழகம் வந்தடைந்துள்ளதால், வெங்காய விலை குறைய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் வெங்காய விலை உச்சத்தை தொட்டு விற்பனையாகி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், கப்பல் மூலம் குளிர்சாதன கண்டெய்னர்களில் அடைக்கப்பட்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பை வந்தடைந்தது.

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து வெங்காயம் தற்போது தமிழகம் வந்தடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு முதற்கட்டமாக 60 டன் அளவிலான எகிப்து வெங்காயம் இன்று வந்திறங்கியது. ஒரு வெங்காயமே 200 கிராம் முதல் 600 கிராம் வரை எடை கொண்டதாக உள்ளது. இந்த வெங்காயம் நாளை முதல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், ஒரு கிலோ 100 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வெங்காய விலை குறைய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் காலையில் திருச்சி வந்தடைந்த 30 டன் எகிப்து வெங்காயம், பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. திருச்சியிலும் ஒரு கிலோ எகிப்து வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வழக்கமான நிறம் போல் அல்லாமல் சற்றே வித்தியாசமாக இருப்பதால் எகிப்து வெங்காயத்தை வாங்க சில்லறை வியாபாரிகள் தயக்கம் காட்டுவதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

திண்டுக்கல் வெங்காயப் பேட்டைக்கு எகிப்து மற்றும் நைஜீரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 டன் அளவிலான வெங்காயம் வந்துள்ளது. வெளிநாட்டு வெங்காயம் கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், உள்நாட்டு பெரிய வெங்காயம் கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் புதியது கிலோ 80 ரூபாய்க்கும், பழையது கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த வாரத்தை காட்டிலும் விலை குறைந்துள்ளதாகக் கூறும் வியாபாரிகள், வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என தெரிவித்துள்ளனர்.

சீரான வரத்து துவங்கியுள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை சற்றே குறைந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் இருந்து வெங்காயத்துடன் புதிதாக 15 லாரிகள்  கோயம்பேடு வந்தன. இதன் காரணமாக நேற்று ஒரு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையான பெரிய வெங்காயம், இன்று சற்றே விலை குறைந்து கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே போல் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயமும் விலை குறைந்து, கிலோ 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆந்திரா வெங்காயம் சராசரியாக நாளொன்றுக்கு 40 லாரிகள் வரை இறக்குமதியாவதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே தேனாம்பேட்டையிலுள்ள தமிழக அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடையில், வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதுக்கோட்டையில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வெங்காயங்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து வெங்காய மண்டிகளில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். பெருமாள் கோயில் மார்க்கெட், தினசரி மார்க்கெட், பெரிய மார்க்கெட்,மாலை சந்தை, தெற்கு ராஜவீதியில் உள்ள வெங்காய மண்டிகள்,வெங்காய மூட்டைகள் வைக்கப்பட்டிருக்கும் குடோன்கள் ஆகியவற்றில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல் திருச்சி பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments