ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது

0 243

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் தொடங்கியது. 

சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்கள், 385 ஊராட்சிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் காலை 10 மணிக்குத் தொடங்கியது. சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் பலர் வந்து மனுத்தாக்கல் செய்து சென்றனர். இங்கு 4 ஆயிரத்து 299 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 2 ஆயிரத்து 741 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு 4 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 29 அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மதுரையில் 13 ஒன்றியங்களிலுள்ள 420 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களிடம் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை அளித்துச் சென்றனர். 

நாமக்கல் மாவட்டத்தில் 15 ஊராட்சி ஒன்றியங்கள், 322 ஊராட்சிகளில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் காலை 10 மணிக்குத் தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் 15 ஊராட்சி ஒன்றியங்களில் ஆயிரத்து 729 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் 263 வாக்கு சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப் பட்டுள்ளன. 

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. வேட்பு மனுத்தாக்கலுக்கான முதல் நாளான இன்று சுயேட்சையாக போட்டியிட விரும்பும் பலர் தேர்தல் அலுவலர்களிடம் மனுதாக்கல் செய்தனர். இந்தத் தேர்தலில் மாவட்டம் முழுவதும் 8 லட்சத்து இரண்டாயிரத்து 157 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 ஆயிரத்து 295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோரை தேர்வு செய்ய இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments