எலிகள், பன்றிகளால் உடைந்த கரை - அமைச்சர் விளக்கம்

0 271

வைகை அணையின் 58ஆம் கால்வாய் கரையில் எலிகளும் பன்றிகளும் துளையிட்டு பலவீனப்படுத்தியதாலேயே உடைப்பு ஏற்பட்டதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா மற்றும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பகுதிகளைச் சேர்ந்த 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் இந்த 58ஆம் கால்வாய் அமைக்கப்பட்டது. வைகை அணை நிரம்பியுள்ளதால் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி கடந்த 5ஆம் தேதி அதிகாலை வைகை அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் 58ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருந்த நிலையில் சனிக்கிழமை காலை டி.புதூர் என்ற இடத்தில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் அருகிலிருந்த விளைநிலங்களுக்குள் புகுந்தது. உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்டது. உடைப்பை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எலி, காட்டுப்பன்றி உள்ளிட்டவை ஏற்படுத்திய துளைகளால் கால்வாயின் கரைகள் பலவீனமடைந்து உடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார்.

கரைகளை சீரமைக்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருவதாகக் கூறிய அமைச்சர், கால்வாயில் இனி உடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் நிரந்தரமாக அதில் நீர்வரத்தை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண நிதி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments