வெங்காயம் விலை குறைந்தது.. ஒரே நாளில் ரூ.20 முதல் ரூ.40 வரை சரிவு..!

0 863

ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரித்ததாலும், பொதுமக்கள் பயன்பாட்டை குறைத்ததாலும், சென்னையில் வெங்காயத்தின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை குறைந்துள்ளது. 

தொடர் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால், நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையிலும் வெங்காயம் விலை கிலோவுக்கு 180 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் பெரிய வெங்காயம் விலை கிலோவுக்கு ஒரே நாளில் 20 முதல் 40 ரூபாய் வரை குறைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று மொத்த விலையில் 170 ரூபாய் வரை விற்கப்பட்ட முதல் தர வெங்காயம் இன்று 130 முதல் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட நடுத்தர வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெங்காயத்தின் அளவு மற்றும் தரத்தை கொண்டு 100 ரூபாய்க்கு குறைவாகவும் ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயமும், கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது.
நேற்று 160 ரூபாய், 170 ரூபாய் என விற்கப்பட்ட அதன் விலை இன்று 130 ரூபாய், 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெங்காய விலை குறைவுக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரித்ததும், பயன்பாட்டை பொதுமக்கள் குறைத்தது உள்ளிட்டவையே காரணம் என்று கூறியுள்ள வியாபாரிகள், வரும் நாள்களில் அதன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மதுரை

இதனிடையே, மதுரையில், பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து, ஒரு கிலோ 220 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெங்காயம் அதிகம் விளையும் மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் பெய்த கனமழை உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்திற்கு வரத்து குறைந்து தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

அந்த வகையில், மதுரை காய்கறி சந்தையில், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 200 முதல் 220 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெங்காயத்தின் தரத்தை பொறுத்து விலை மாறுபடுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரத்து சற்று அதிகரித்துள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலை சிறிது குறைந்து, ஒரு கிலோ 200 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments