புதைக்கப்பட்ட நகைகள் கொள்ளை மாமனார், மருமகள் நாடகம்

0 204

ன்னியாகுமரி அருகே வீட்டிற்குள் புதைத்து வைக்கப்பட்ட 110 சவரன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம், மாமனாரும் மருமகளும் ஒருவர் அறியாமல் ஒருவர் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் என்பது தெரிய வந்துள்ளது.

குமரிமாவட்டம் செக்குவிளை பகுதியை சேர்ந்த துணி வியாபாரி ராஜையன் என்பவருக்கு, மூன்று மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். அவர்களுள் இரு மகன்கள் மற்றும் மகள்களுக்கு திருமணமான நிலையில், அருகருகே உள்ள 2 வீடுகளில் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மூத்த மகனின் குழந்தைக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் தக்கலையில் உள்ள குமாரகோயிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வீடு திரும்பிய போது வீட்டில் தனியாக இருந்த மூத்த மருமகள் பிரீத்தா முகத்தில் மிளகாய்பொடி தூவப்பட்டு, கழுத்தில் துப்பட்டாவால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பிரீத்தாவிடம் விசாரித்த போது, கொள்ளையர்கள் இருவர் வீட்டில் தனியாக இருந்த தன் மீது மிளகாய் பொடி தூவி கட்டிப் போட்டு விட்டு, வீட்டினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து தங்கள் வீட்டிலிருந்த 110 சவரன் நகைகள் கொள்ளைபோனதாக பிரீத்தாவும், ராஜையனும் தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் குடும்பத்தினரிடம் தனித்தனியே விசாரித்தனர்.

அதில் 110 சவரன் அளவுக்கு நகைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை என அவர்கள் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், ராஜையனிடமும், பிரீத்தாவிடமும் துருவித் துருவி விசாரித்தனர். அதில் தான் அவர்களிருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமலேயே கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.

மொத்தம் 60 சவரன் நகைகள் மட்டுமே வீட்டிலிருந்த நிலையில், அதில் 50 சவரன் நகைகளை விற்று இளைய மகளின் கடன்களை அடைத்த ராஜையன் 10 சவரன் நகைகளை மட்டுமே மூத்த மருமகள் பிரீத்தா முன்னிலையில் வீட்டின் மூலையில் புதைத்து வைத்துள்ளார்.

அதனை யாருக்கும் தெரியாமல் சிறுக சிறுக எடுத்து செலவு செய்த பிரீத்தா, அவை கொள்ளை போய்விட்டதாக அனைவரையும் நம்ப வைக்க கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த மாமனார் ராஜையனும், 110 சவரன் நகைகள் கொள்ளை போனதாக கூறியுள்ளார்.

இந்த விவரங்கள் அனைத்தும் விசாரணையில் தெரிய வரவே, இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என எழுதிவாங்கிய போலீசார், அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments