கலைநயத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.. விடுப்பின்றி வரும் மாணவர்கள்..!

0 236

தப்பாட்டம்.... கரகாட்டம்....பொம்மலாட்டம்... என தமிழர்களின் கலாச்சராத்தை நினைவுட்டும் வகையில் கலைநயத்துடன் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.... ஆசிரியரின் இந்த வித்தியாசமான முயற்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

பொதுவாகவே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் என்றால் சம்பளத்துக்காக மட்டுமே வேலை செய்வார்கள் என்ற எண்ணம் பலரது மனதில் இருக்கிறது. ஆனால் பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் திறமையை பலவழி முறைகளில் நிரூபித்துக் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவர்களின் வருகை சேர்க்கை பதிவு கணிசமான அளவில் குறைந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் 13 அரசுப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கையும்,வருகையும் படிப்படியாக குறைந்து வந்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவை அதிகரிக்கும் நோக்கத்துடன், கமுதி அருகே உள்ள காத்தனேந்தல் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், ஆசிரியராக இருக்கும் விஜயராம் என்பவர், ஆடல்.... பாடல்....தப்பாட்டம்... பொம்மலாட்டம்... என கல்வியை பல கலைநயத்துடன் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.

ஆசிரியரின் இந்த புதிய முயற்சிக்கு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக, மாணவ செல்வங்கள் நாள்தோறும் விடுப்பு இன்றி ஆர்வமுடன் பள்ளிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியரின் இந்த முயற்சிக்கு பள்ளி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதால், தனது சொந்த பணத்தை செலவு செய்து இசைப் பொருட்களை பெற்று, அதன் மூலம் கல்வி கற்பித்து வருகிறார் ஆசிரியர் விஜயராம்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவே இந்த முயற்சி எடுத்ததாகவும், இதற்காக தமிழ்நாடு ஆசிரியர்கள் கலைக்குழு என்ற இயக்கத்தை தொடங்கி, அதன் மூலம் ஆசிரியர்கள் இந்த நாட்டுப்புறக் கலைகளை கற்றுக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மாணவர்களுக்கு கலைநயத்துடன் கற்பிக்கும் போது, பரம்பரை கலைகள் குறித்த ஆழமான பார்வை மாணவர்களிடம் ஏற்படும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வகுப்புக்கு வந்தோம் பாடம் எடுத்தோம்...என்பது போல் இல்லாமல்.... தன்னிடம் படிக்கும் குழந்தைகளிடம் ஒரு நண்பராகவும், தந்தையாகவும் பாசத்தை காட்டி பயின்று வருவது கல்வி புரட்சிக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக அமையும்  என்று சொன்னால் அது மிகையாகாது....

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments