சமூக வலைதள வதந்தியால் பறிபோன உயிர்.. ஆக்சிஸ் வங்கி ஊழியர் கைது..!

0 690

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற வதந்தியை நம்பி ஆக்சிஸ் வங்கி ஊழியரிடம் 4 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்த கோவையைச் சேர்ந்த தொழிலதிபர், பணத்தை திருப்பிக் கேட்டதால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோவை ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கடந்த 3 ஆம் தேதி ,காயங்களுடன் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் என்பது தெரியவந்தது. சண்முகத்தின் செல்போன் எண்ணைக் கொண்டு நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஜனவரி மாதம் முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் பணத்தை விரைவாக மாற்றிக்கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாகவும் வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே வதந்திகள் பரவி வருகின்றன.

இது உண்மையா என்பதை அறிய, சுந்தராபுரம் ஆக்சிஸ் வங்கிக் கிளையில் விற்பனைப் பிரிவு மேலாளராகப் பணியாற்றி வரும் சதீஷை அணுகி சண்முகம் விசாரித்துள்ளார்.

அவரின் அறியாமையை பயன்படுத்த எண்ணிய சதீஷ், அந்த செய்தி உண்மைதான் என்றும், இருக்கும் பணத்தைக் கொடுத்தால் 15 முதல் 20 விழுக்காடு கமிஷனுக்கு அதனை மாற்றித் தருவதாகவும் கூறியதாகத் தெரிகிறது.

அதனை உண்மை என நம்பிய சண்முகம், 4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றித் தருமாறு கூறியுள்ளார்.

அப்போது அவருடைய நண்பர்களிடமும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தால் வாங்கித் தருமாறும் அதனை கமிஷன் அடிப்படையில் மாற்றித் தருவதாகவும் சதீஷ் கூறியுள்ளார்.

அதனை சண்முகம் தன் நண்பர்களிடம் தெரிவிக்க, அவர்களில் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற செய்தி வதந்தி என்ற உண்மையை எடுத்துக் கூறியுள்ளார்.

அதிர்ந்துபோன சண்முகம் சதீஷை அணுகி சண்டையிட்டதோடு, பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து சண்முகத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்த சதீஷ், அவரை ஈச்சனாரி டாஸ்மாக் கடைக்கு வரவழைத்து கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து, முட்புதரில் வீசிச் சென்றது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

கொலை தொடர்பாக சதீஷ், மகேஸ்வரன், மதுசூதனன் ஆகிய மூவரை கைது செய்துள்ள போலீசார், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளை ஆராயாமல் நம்பக்கூடாது என்று கூறும் போலீசார், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வெங்கடேசன், வீரமணி, ஹரிகிருஷ்ணன், கார்த்திக் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை போத்தனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ள நிலையில், விஜய், சண்முகம், நவுசாத் ஆகிய மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments