மகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...

0 376

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண்களிடம் அத்துமீற முயன்றதாகக் கூறப்படும் இருவர், காவலன் செயலி மூலம் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செயலி மூலம் நடைபெற்றுள்ள முதல் கைது நடவடிக்கை இது என்று கூறப்படும் நிலையில், செயலியின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து தற்போது காணலாம்....

சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சி.பி. ரோடு (CB road) பகுதியில் உள்ள “ஓஸ்வால் கார்டன்” (oswal garden) அடுக்குமாடி குடியிருப்பில் அனிதா சுரானா என்பவரும் அவரது மருமகள் பிரீத்தியும் வசித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இவர்களது வீட்டின் கதவு தட்டப்படவே,பிரீத்தி சென்று கதவை திறந்துள்ளார். அப்போது அவரை நெட்டித் தள்ளிவிட்டு 2 மர்ம நபர்கள் உள்ளே நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அனிதா சுரானா, உடனடியாக தனது மொபைலில் இன்ஸ்டால் செய்துவைத்திருந்த காவலன் செயலியை திறந்து அதிலிருந்த எஸ்.ஓ.எஸ். பொத்தானை அழுத்தியிருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து மர்ம நபர்களை வெளியேற்ற போராடியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களிலேயே அங்கு ஆர்.கே. நகர் காவல்துறையினர் அதிரடியாக நுழைந்து மர்ம நபர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட இருவரில் ஒருவரது பெயர் சலீம் என்பதும் மற்றவர் பெயர் தாவூத் என்பதும் தெரியவந்தது. பிடிபட்டபோது இருவருமே மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காவலன் செயலி மூலம் நடைபெற்றுள்ள முதல் கைது நடவடிக்கை இது என்று கூறப்படுகிறது.

கடந்த ஓராண்டுக்கு முன் தமிழ்நாடு காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காவலன் செயலி குறித்து பல்வேறு கட்டங்களாக மக்கள் மத்தியில் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அப்படி ஒரு விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற பின்னர்தான் காவலன் செயலியை தனது மொபைலில் பதிவிறக்கம் செய்துள்ளார் அனிதா சுரானா.

சனிக்கிழமையன்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ மாணவிகளுக்கு செயலி குறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி விளக்கினார்.

காவலன் செயலியை அனைத்து வகையான ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் தங்களது மொபைல் எண், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்களையும் ஏதேனும் 3 முக்கியமான உறவினர்களின் மொபைல் எண்களையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஆபத்துக் காலங்களில் செயலியில் SOS என்று பொறிக்கப்பட்டுள்ள சிகப்பு நிற பொத்தானை அழுத்தியவுடன், உடனடியாக அதில் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் சென்றுவிடுகிறது.

காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அருகிலுள்ள காவல் நிலையத்துக்கும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கும் தகவல் சென்றுவிடுகிறது. அதிகபட்சம் 5 அல்லது 6 நிமிடங்களுக்குள் போலீசார் குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிடுகின்றனர்.

இண்டெர்நெட் இல்லாத பகுதிகளாக இருந்தாலும் குறுஞ்செய்தி மூலமாக இந்த அவசரச் செய்தி சென்றுவிடும் என்கின்றனர் போலீசார். இந்த செயலியை தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பள்ளி, கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களுக்குமே காவலன் செயலி ஓர் ஆபத்பாந்தவனாக, வரப்பிரசாதமாக வந்துள்ளது என்றால் அது மிகையில்லை.....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments