மெட்ரோ பயணிகளுக்கு குறைந்த வாடகை ஸ்கூட்டர்..!

0 357

மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பயணிகள் பிற இடங்களுக்கு குறைந்த செலவில் எளிதாக செல்லும் வகையில், வாடகைக்கு மின்சார பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும், பிளை எனும் தனியார் நிறுவனமும் இணைந்து, முதல்முறையாக சென்னை ஆலந்தூர் ரயில் நிலையத்தில் குறைந்த வாடகையிலான மின்சார பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

முதற்கட்டமாக 6 வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், முழுக்க முழுக்க செயலி மூலம் மட்டுமே பயன்படுத்தும் வகையில் பைக்குகள் வடிவமைக்கட்டுள்ளன.

அதனை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த விரும்புவோர், கூகுள் பிளே ஸ்டோரில் FLYY எனும் செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டும். அதில் விவரங்களை பதிவு செய்தவுடன், அந்த செயலியிலேயே பயணிகள் தங்களின் புகைப்படத்தை பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் ஓட்டுநர் உரிமத்தின் இரு புறங்களையும் ஸ்கேன் செய்தவுடன், பயணியின் செல்போன் எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் வருகிறது. அதனை செயலியில் உள்ளீடு செய்து விட்டு வாகனத்திலிருக்கும் QR கோடை ஸ்கேன் செய்தால் போதும், அந்த நொடி முதல் வாகனம் பயன்பாட்டுக்கு வந்துவிடுகிறது. அப்போது முதல் நிமிடத்திற்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணமாக கணக்கிடப்படுகிறது.

நாம் விரும்பும் இடத்துக்கு சென்ற பின்னர் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு எண்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்துவிட்டால், அந்த நிமிடம் வரை கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்காக, செயலியை தரவிறக்கம் செய்யும் போதே பிளை நிறுவனம் சார்பில் 100 ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கப்படுகிறது.

அதிலிருந்து முன்பதிவு கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதற்கு மேலும் வாகனத்தை பயன்படுத்த வேண்டுமென்றால் பயணிகள், தேவையான கட்டணத்தை செயலியில் வைப்பு வைக்க வேண்டும்.

மேலும் செல்லும் வழியில் உணவருந்துவதற்காகவோ, பிற காரணங்களுக்காகவோ எங்காவது வாகனத்தை நிறுத்த நேரிடும் போது, பாஸ் (pause) என்ற ஆப்ஷனை கிளிக் செய்து விட்டால் நிமிடத்திற்கு 50 காசுகள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மீண்டும் இயக்கும் பொழுது நிமிடத்துக்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி வாகனத்தை எடுத்த இடத்துக்கே கொண்டு வந்து விட வேண்டிய அவசியமும் இல்லை. நாம் நிறுத்திச் செல்லும் இடத்திலிருந்து பிளை நிறுவன ஊழியர்களே வாகனத்தை எடுத்துச் சென்று விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம், செல்போனை சார்ஜ் செய்யும் வசதிகளும் இந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. வாகனத்தினை இயக்குவதற்கோ, அதன் உள்புறம் இருக்கும் தலைக்கவசத்தை எடுப்பதற்கோ சாவி எதுவும் கிடையாது. அனைத்து இயக்கங்களையும் செயலி மூலமாகவே செய்ய வேண்டும்.

4 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும், 50 கிலோ மீட்டர் வரை இந்த வாகனத்தில் பயணிக்கலாம். தற்போது முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வாகனங்கள், ராமாபுரம் மியாட் மருத்துவமனை முதல், வேளச்சேரி பீனிக்ஸ் மால் வரையிலான சுற்றுவட்டாரங்களுக்குள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அதிக கட்டணம் செலுத்தி காத்திருந்து கால் டாக்சிகளில் செல்ல வேண்டியதன் தேவை குறைவதால் நேரம் மிச்சமாவது மட்டுமின்றி, மின்சார பைக்குகள் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லை. பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் பட்சத்தில், இந்த வசதி பிற இடங்களுக்கும் பரவலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments