டேய் ஆபாச படம் பார்ப்பவன் தானே ? மிரட்டல் போலீஸ் - கதறல் பையன்

0 1298

தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களை பட்டியலிட்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க போவதாக அறிவித்திருந்த நிலையில் நெல்லையை சேர்ந்த பள்ளி மாணவனின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு காவல்துறையில் இருந்து பேசுவதாக கூறி பணம் கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பதும் பகிர்வதும் குற்றம், அதனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க லிஸ்ட் தயார் செய்யப்பட்டுள்ளது. என்று கூடுதல் டிஜிபி ரவி அறிவித்திருந்த நிலையில் இதனை பயன்படுத்தி நெல்லையில் பள்ளி மாணவனை காவலர் எனக்கூறி மிரட்டி பணம் பறிக்க நடந்த முயற்சி அம்பலமாகி உள்ளது.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவனின் செல்போன் எண்ணுக்கு, பின்னணியில் வாக்கி டாக்கி ஒலிக்க காவல் நிலையத்தில் இருந்து, போலீஸ் பேசுவதாக அழைத்துள்ளது அந்த மிரட்டல் குரல், ஆபாச படம் பார்த்ததை முதலில் மறுத்த அந்த சிறுவன் ஒரு கட்டத்தில் பயந்து போய் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளான்.

அபராதமாக 7 ஆயிரம் ரூபாய் வரை அவனிடம் இருந்து பறிக்க திட்டமிட்ட அந்த குரல் ஒரு கட்டத்தில் தனது இணைப்பை துண்டித்துக் கொண்டது. இது தொடர்பாக கூடுதல் டிஜிபி ரவியை தொடர்பு கொண்ட போது. நெல்லை மாவட்ட போலீசுக்கு இதுவரை ஆபாச படம் பார்த்தவர்களின் லிஸ்ட் எதையும் அனுப்பவில்லை என்று தெரிவித்தார்.

அப்படி என்றால் பள்ளி மாணவனிடம் பேசிய அந்த நபர் யார் என்பது குறித்து நெல்லை மாவட்ட காவல் கண்ணானிப்பாளர் அலுவலகத்தில் விசாரித்த போது, இது வரை ஆபாச படம் பார்த்தவர்கள் குறித்த தகவல் ஏதும் தங்கள் வசம் இல்லை என்றும் அந்த ஆடியோவை தாங்களும் கேட்டதாகவும், அதில் பேசிய நபர் குறித்து விசாரித்து வருவதாகவும் விளக்கம் அளித்தனர்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெருகுவதற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன்களில் ஆபாச படங்கள் பார்ப்பது தான் முக்கிய காரணம் என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்து, அது தொடர்பான லிஸ்ட்டை தமிழக காவல்துறைக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

போலீசை முந்திக் கொண்டு அந்த லிஸ்ட்டை சுட்டிக்காட்டி பணம் பறிக்கும் மிரட்டல் கும்பல்கள் கைவரிசை காட்ட தொடங்கி இருப்பது இந்த ஆடியோவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் போலீசாருக்கு புதிய தலைவலி உருவாக்கியுள்ளது.

ஆபாச படம் பார்ப்பவர்களின் விவகாரத்தில் போலீசார் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்று டிக்டாக்கிலும் சிலர் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

காவல்துறை ஆபாச படம் பார்ப்பவர்களை பிடிக்கிறதோ இல்லையோ மிரட்டல் கும்பலை முதலில் பிடிக்க வேண்டும் இல்லையேல் பணத்தை பறிகொடுப்பவர்கள் ஒரு புறம் என்றால், சிலர் கேலிக்கு மிரட்டினால் கூட இதயம் பலகீனமானவர்கள் மிரட்டலுக்கு அஞ்சி தவறான முடிவை தேடிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

ஐஸ்வர்யாராய் படம் வரைய நினைத்து... முடிவில் ஆயா படம் வரைந்த கதையாக மாறி போனதா காவல்துறையின் ஆபாசபட எச்சரிக்கை அறிவிப்பு..! என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments