முன்னெப்போதையும் விட வங்கித்துறை வலிமையாக செயல்படுவதாக மோடி பேச்சு

0 296

வங்கிகளுக்கு இருந்த மிகப்பெரிய நெருக்கடி முடிந்துவிட்டதாகவும், வளமான எதிர்காலத்திற்காக தயக்கமின்றி முதலீடுகள் தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆங்கில நாளிதழின் சார்பில் நடைபெற்ற தலைமைப் பண்பு கருத்தரங்கில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, கடந்த கால அரசுகளின் தவறான செயல்களால்தான் வங்கிகளுக்கு கடும் நிதி நெருக்கடி எழுந்ததாக தெரிவித்தார். வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற அச்சமின்றி அனைத்து ஊழியர்களும் உறுதியாக பணியாற்றும்படி கூறிய மோடி, வங்கிகளின் இணைப்பு நடவடிக்கையால் வங்கிகளுக்கு இருந்த நெருக்கடியான காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறினார்.

வங்கிகளின் மறு சீரமைப்புக்காக மத்திய அரசு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கியிருப்பதாகவும், தீர்ப்பாயங்கள் மூலமாக சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

முந்தைய நிலையை விட வங்கிகளின் தொழில் தற்போது மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், வர்த்தகம் தொடர்பாக இனி எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை என்று தெரிவித்தார்.

பொறுப்புடன் செயல்பட்டுவரும் தமது அரசு, மிகச்சிறந்த வளமான எதிர்காலத்தை நோக்கி செல்வதாகவும் மோடி தெரிவித்தார். தொழில்புரியும் தகுதி படைத்த நாடுகளின் தரவரிசையில் இந்தியா 70 இடங்களுக்கு முன்னேறி இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். காஷ்மீர் விவகாரம், அயோத்தி வழக்கு ஆகியவற்றை சுட்டிக் காட்டிய மோடி, புதிய வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments