பெண்களுக்கு பாதுகாப்பானதா சென்னை?

0 541

ஐதராபாத் சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து பெருநகரங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பெண்களுக்கான பாதுகாப்பு எவ்வாறு உள்ளது? காவல் துறையிடம் உள்ள வசதிகள் என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி...

தமிழக காவல் துறையில் காவலன் எஸ்.ஓ.எஸ் என்கிற செல்போன் செயலி கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்து. ஐதராபாத் சம்பவத்தை தொடர்ந்து, சென்னையில் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசித்து அதை மேம்படுத்துவதற்கான பணியில் இறங்கியிருப்பதாக  தெரிவித்துள்ளது சென்னை காவல் துறை.

காவலன் செல்போன் செயலியை அனைத்து தரப்பினரும் வைத்திருக்க வேண்டும் என்றும், குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகளிடம் அவசியம் இருக்க வேண்டும் என்றும் காவல் துறை அறிவுறுத்துகிறது. இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலன் செயலியை மாணவிகளுக்கு அறிமுகப்படுத்திய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், காவல் துறையில் பல வசதிகள் இருந்தாலும், பொதுமக்கள்  எளிதில் தொடர்பு கொள்ள புதிய உதவி மைய எண் ஒன்று விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்றார். 

இந்தியாவில் உள்ள 6 முக்கிய பெருநகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பில் முதலிடம் வகிக்கிறது சென்னை. சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களில் மற்ற நகரங்களை காட்டிலும் சென்னையில் தான் குறைவான வழக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.   

டெல்லியில் ஒவ்வொரு வருடமும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட ஐதராபாத் நகரில் ஒவ்வொரு வருடமும் பெண்களுக்கு எதிராக  சராசரியாக இரண்டாயிரம் குற்ற சம்பவங்கள் பதிவாகிறது. மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களை காட்டிலும் குறைவாக சென்னையில் ஆண்டுக்கு சராசரியாக  500 குற்ற சம்பவங்கள் பதிவாகிறது.

இந்தியாவிலேயே காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென தனிப்பிரிவு உள்ள ஒரே மாநிலம் தமிழகம் தான். இந்த பிரிவின் சென்னை காவல் துணை ஆணையரான ஜெயலஷ்மி, நிர்பயா திட்டத்தின் மூலமும், தமிழக காவல் துறை மூலம் பெண்களின் பாதுகாப்பிற்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார்.

சென்னை காவல் துறையில் பெண்களுக்காக அனைத்து மகளிர் போலீசாருக்கு ரோந்து வாகனம், நிர்பயா திட்டத்தின் மூலம் முக்கிய இடங்களில் சிசிடிவி, காவலன் செல்போன் செயலி போன்ற கூடுதல் வசதிகள் இருந்தாலும் பாதுகாப்பான நகரம் என்ற திட்டத்தின் கீழ் மேலும் சில புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவிருப்பதாக சென்னை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments