சூடான் தீ விபத்தில் 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் பலி..!

0 592

சூடான் நாட்டில் செராமிக் டைல்ஸ் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் 18  பேர் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். 

சூடான் நாட்டின் தலைநகரான கார்த்தோமின் வடக்கு புறநகர் பகுதியான பகரியில் சலோமி என்ற செரமிக் டைல்ஸ் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் பெரிய டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட எரிவாயுவை இறக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாரத விதமாக எரிவாயு கசிந்து தீப்பற்றிக் கொண்டது. இதில் அந்த லாரி பல நூறு அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. தொழிற் சாலையின் பல இடங்களிலும் தீப்பற்றிக் கொண்டது. இதனால் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிர் தப்ப எண்ணி ஓட்டம் பிடித்தனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைக்கும் படையினரும் போலீசாரும் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் தொழிலாளர்கள் 23 பேர் உயிரிழந்தது தெரியவந்த து. மேலும் 130 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இந்த தீவிபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சூடான், அரசு தொழிற்சாலையில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை என்றும், தீ தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

இந்த விபத்தில் இந்தியர்கள் 18 பேர் உயிரிழந்தனர். அவர்களில் மூன்று பேர் தமிழர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. உயிரிழந்த தமிழர்கள் மூன்று பேரில் ஒருவர், கடலூர் மாவட்டம் மானடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்துள்ளது.

அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு ராஜசேகரின் மனைவி கலைசுந்தரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே அந்த தொழிற் சாலையில் இந்தியர்கள் 50 பேர் பணியாற்றி வந்த தாகவும், மூன்று பேர் உயிரிழந்த தாகவும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மற்ற தொழிலாளர்களின் நிலை குறித்து அறிய 249-921917471 என்ற தொலைபேசி எண்ணையும் அவர் அறிவித்துள்ளார். இந்திய தொழிலாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே தீ விபத்தில் இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்த தற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சூடான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களில் மற்றொருவர் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியை அடுத்த ஆலங்குடிச்சேரி கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ராமகிருஷ்ணன், குடும்ப கஷ்டத்தால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சூடான் நாட்டின் டைல்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

விபத்தில் அவர் பலியானதை அறிந்து வேதனையில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர், ராமகிருஷ்ணனின் உடலை பெற்றுத்தர இந்திய தூதரகம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய ,மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments