என் மகன் நிலை யாருக்கும் வர கூடாது.. இரங்கல் கூட்டத்தில் ஹெல்மெட் கொடுத்த தந்தை

0 369

மத்தியப் பிரதேசம் தாமோ எனுமிடத்தில் ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் தந்தை, நெகிழ வைக்கும் ஒரு இரங்கல் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

25 வயதான லக்கி தீட்சித் கடந்த நவம்பர் 20ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கினார். தலைக்கவசம் அணியாத காரணத்தால் அவர் தலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பம் பெரும் சோகத்தில் இருந்தது

தான் மகனை இழந்து அனுபவிக்கும் வேதனையை பிறர் அனுபவிக்க கூடாது என்று லக்கி தீட்சித்தின் தந்தை நினைத்தார். ஒருவேளை ஹெல்மெட் அணிந்திருந்தால் மகன் உயிர் பிழைத்திருக்க கூடும் என்று கருதினார்.

எனவே ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை பிறருக்கு எடுத்துரைத்து, வேறு யாருக்கும் இது போல விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என யோசித்து அதற்காகவே மகனுக்கு இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.

இதில் அவரது உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் என பலரும் பங்கேற்றனர். இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் தான் சொந்த பணத்தில் வாங்கிய தரமான ஹெல்மெட்டுகளை கொடுத்தார்.

ஹெல்மெட்டை கொடுத்த போது ஒவ்வொருவரிடமும் இரு சக்கர வாகனத்தை ஓட்டினால் ஹெல்மட் அணியாமல் செல்லாதீர்கள் என்று உருக்கமாக வேண்டிக் கொண்டார்.

இறந்த இளைஞரின் தந்தை செய்த இந்த செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டியுள்ளார். விபத்தில் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்த வலியிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்த அந்த தந்தைக்கு பாராட்டு குவிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments