"மாத்தி யோசி".. குரங்குகளிடமிருந்து பயிரை காப்பாற்ற விவசாயி செய்த பலே ஐடியா

0 426

நாயை புலி போல மாற்றி தங்கள் வயல்களை பாதுகாக்கின்றனர் விவசாயிகள். கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது நலுரு கிராமம். இங்கு தான் நாயை புலியாக மாற்றும் விசித்திரம் நடக்கிறது.

நலுரு கிராமத்தில் விவசாய தொழில் தான் பிரதானம். இங்கு வசிக்கும் விவசாயிகள் காபி மற்றும் பாக்கு பயிரிட்டு வருகின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு பெரும் தலைவலியாக குரங்குகள் இருந்துள்ளன.

அவர்கள் கஷ்டப்பட்டு பயிரிட்டால் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள், வயல்களில் புகுந்து அவற்றை நாசம் செய்து வந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளனர். குரங்குகளின் அட்டகாசத்தை எப்படியாவது தடுக்க வேண்டுமே என்ற கவலையில் ஆழ்ந்தனர்.

பின்னர் தான் ஒரு யோசனை செய்தனர். அதன்படி புலி பொம்மைகளை வாங்கி வந்து வயல்களில் வைத்தனர். அதனை கண்ட குரங்குகள் உணமையிலேயே புலிகள் உள்ளன என அச்சமடைந்து சில காலம் தங்களது வேலையை காட்டாமல் இருந்து வந்துள்ளன.

ஆனால் விவசாயிகள் வைத்தது பொம்மை தானே. எனவே ஒரு கட்டத்தில் வெயில், மழையில் நனைந்து புலி பொம்மைகளின் நிறம் மாறியது. இதனை கண்ட குரங்குகள் மீண்டும் கூட்டமாக வந்து பயிர்களை சேதப்படுத்தின.

மீண்டும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஸ்ரீகாந்த் கவுடா என்ற விவசாயி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டார். தீவிரமாக யோசித்த அவருக்கு தான் நாயை பார்த்ததும் ஒரு ஐடியா வந்துள்ளது.

இதனை அடுத்து தன் நாயின் உடலில் புலி போல் வர்ணம் அடித்து, வயலுக்கு அழைத்து சென்றார். தினமும் காலை, மாலை என 2 வேளையும் நாயை வயலுக்கு கூட்டி சென்றார். ஸ்ரீகாந்த் கவுடாவின் இந்த புதிய முயற்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது.

புலி போல நிறம் மாற்றப்பட்ட நாயை கண்ட குரங்குகள், தலைதெறித்து ஓட துவங்கின. தற்போது ஸ்ரீகாந்த் கவுடாவின் வயல்களுக்கு வருவதை குரங்குகள் நிறுத்திவிட்டன. இதனால் பயிர்கள் சேதமாகாமல் தப்பித்தது. மீண்டும் அவருக்கு லாபம் அதிகரிக்க துவங்கியது.

இதனை பார்த்த மற்ற விவசாயிகளும் ஸ்ரீகாந்த் கவுடாவை பின்பற்றி நாய்களுக்கு புலி போல வர்ணம் அடித்து தங்களது வயல்களில் உலவ விட்டுள்ளனர்.

எந்த ஒரு பிரச்னைக்கும் மாற்றி யோசித்தால் தீர்வு கிடைக்கும் என்பது உண்மையாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments