4 மாவட்டங்களில் கனமழை..!

0 1317

லங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக,ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கை மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நிலவுவதாகவும், இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்றார்.

ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரையில் நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும் எனவும் பாலசந்திரன் கூறினார். குமரிக் கடல் பகுதியில் சூறை காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு குமரிக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் பாலசந்திரன் கேட்டுக் கொண்டார்.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வரையில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 13 சென்டி மீட்டர் மழையும், ராமநாதபுரத்தில் 9 சென்டி மீட்டர் மழையும், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக பாலசந்திரன் தெரிவித்தார்.

அதேபோல் வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 42 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருப்பதாகவும், இது இயல்பை விட 13 சதவீதம் அதிகம் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments