பவானி அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

0 1174

பவானி சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர ஊர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு திடீர் என்று நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வினாடிக்கு 30,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 105 அடி உயரம் கொண்ட பவானி சாகர் அணை கடந்த நவம்பர் மாதம் 8 ம் தேதி நிரம்பிய நிலையில், கடந்த 23 நாட்களாக முழு கொள்ளளவில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கொட்டிய கனமழையால் அணைக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. காலை 8 மணிக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,200 கனஅடியாக இருந்த நிலையில், மதியம் நீர்வரத்து வினாடிக்கு 30,300 கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் அணைக்கு வரும் 30,300 கன அடி நீரும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது

இதனால் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை புரண்டு ஓடுகிறது. வழக்கத்தை காட்டிலும் அதிக தண்ணீர் திறப்பால், கரையோர பகுதிகளில் ஒலி பெருக்கி மூலமாகவும், தண்டோரா போட்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் கதிரவன் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே பவானிசாகர் அணையின் நீர் அளவை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கவும், கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments