16 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

0 3297

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வலுப்பெற்றுள்ளது என்றார்.

கடந்த 24 மணிநேரத்தில் 17 இடங்களில் கனமழையும், 3 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளதாக அவர் கூறினார். மேட்டுப்பாளையத்தில் 18 செ.மீட்டரும்,குன்னூரில் 13 செ.மீட்டரும்,மதுராந்தகத்தில் 10 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக அவர் கூறினார்.

தென்மேற்கு அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறும் என்று அவர் குறிப்பிட்டார். இதனால் கிழக்கு கடலில் உள்ள காற்று இழுக்கப்படுவதால் நிலவும் வளி மண்டல சுழற்சியாலும், தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையாலும் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைத்து வருவதாக அவர் கூறினார். 

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று பாலசந்திரன் குறிப்பிட்டார். 

வருகிற 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற அவர், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.

சென்னை நகரை பொறுத்தவரை லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று பாலசந்திரன் கூறினர். நகரின் அதிக பட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த அக்டோபர் ஒன்று முதல் இன்று வரை தமிழகத்தில் 40 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்றும், இந்த காலகட்டத்தின் இயல்பு மழை அளவு 36 செ.மீட்டர் என்றும், 11 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது என்றும் பாலசந்திரன் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments