அறுந்து விழுந்த மின்கம்பி... அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுமி...!

0 374

சென்னை விருகம்பாக்கத்தில் மின் கம்பத்திலிருந்து அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கிய சிறுமி ஒருவரும் மீன் வியாபாரி ஒருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மின் விபத்துகள் நிகழும்போது அருகிலிருப்பவர்கள் எத்தனை கவனமாக செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

விருகம்பாக்கத்தில் கடந்த 28ஆம் தேதியன்று இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  மீன் வியாபாரி ஒருவர் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான மீனை வீடு ஒன்றின் வாசலில் வைத்து வெட்டி எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அந்த மீன்கழிவுகளை உண்பதற்காக அருகிலிருந்த மின்கம்பத்தில் காக்கைகள் கூட்டமாக வந்து அமர்ந்திருந்தன. அப்போது காக்கைகளில் ஒன்று நிலை தடுமாறி தலைகீழே சாய, பதற்றத்தில் மற்ற காக்கைகள் பறக்க முயற்சித்துள்ளன. அந்த நேரம் தளர்வாக இருந்த மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி, அவற்றில் ஒன்று துண்டாகி கீழே நின்றிருந்த சிறுமி மீது விழுந்தது.

ஆனால் இதில் தப்பிய அவர் உடனடியாக வீட்டுக்குள் செல்ல முயன்ற போது, அங்கு அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து பதறிப்போய் சிறுமியை காப்பாற்றச் சென்ற மீன் வியாபாரியையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.

இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய விஷயமாக, மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் கீழே மயங்கிக் கிடந்த சிறுமியை பார்த்த பெண் ஒருவர், பதற்றமாகி ஓடிச் சென்று அவரை தூக்க முற்படாமல், அருகிலிருந்த நீண்ட குச்சி ஒன்றை எடுத்து, மின் கம்பியை அகற்றிவிட்டு சிறுமியை தூக்கியுள்ளார். அதே நேரம் அருகிலிருந்த வீட்டைச் சேர்ந்த பெண், முன்பக்க இரும்பு கேட்டில் சரிந்து கிடந்த மின் கம்பியை அலட்சியமாகக் கையில் எடுக்கிறார்.

எதிர்வீட்டுப் பெண் அவரை எச்சரித்ததும் மின் கம்பியை கீழே போடும் அந்தப் பெண் தொடர்ந்து அங்கிருந்து சென்று பக்கத்திலுள்ள இரும்பு கேட்டையும் கைகளால் திறக்கிறார்.

விபத்து நிகழ்ந்த சில நிமிடங்களில் தானியங்கி மின் துண்டிப்பான் செயல்படாமல் போயிருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். இதுபோன்ற சமயங்களில் சுற்றி இருக்கும் இரும்பால் செய்யப்பட்ட பொருட்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் அவற்றை அருகிலிருப்பவர்கள் தொடவே கூடாது என்கின்றனர் மின் வல்லுநர்கள். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments