இந்துத்துவா கொள்கையில் இருந்து ஒருபோதும் விலகவில்லை- உத்தவ் தாக்கரே

0 313

காங்கிரசுடன் கூட்டணி வைத்திருப்பதால் இந்துத்துவா கொள்கையில் இருந்து விலகப் போவதில்லை என்று மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.அதை ஒருபோதும் விட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக மகாராஷ்ட்ராவின் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பத்னாவிஸ், பதவிக்காக சிவசேனா அதன் முக்கிய சாராம்சமான இந்துத்துவா கொள்கையை விட்டு விலகிவிட்டதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய உத்தவ் தாக்கரே போதிய எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாமல் இரவோடு இரவாக ஆட்சியமைத்த பத்னாவிசை கடுமையாக விமர்சித்தார். அந்த அரசு மூன்று நாட்களுக்கு கூட தாக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் இந்துத்துவ சித்தாந்தம் சிவசேனாவுக்கு இன்றியமையாதது என்றும் கட்சி அதை விட்டுவிடாது என்றும் குறிப்பிட்டார். ஒரு வாக்குறுதியைக் கடைப்பிடிப்பதும் எனது இந்துத்துவத்தின் ஒரு பகுதி. நான் நேற்றும் சரி , இன்றும் சரி எனது இந்துத்துவத்தைப் பின்பற்றி வருகிறேன். எதிர்காலத்திலும் இதைத் தொடருவேன் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

தொடர்ந்து நான் தேவேந்திரபத்னாவிசிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், நான் எப்போதும் அவருடன் நட்பாக இருப்பேன். கடந்த ஐந்து ஆண்டுகளில், நான் ஒருபோதும் அவரது அரசுக்கு துரோகம் செய்யவில்லை என்றார்.

இதனிடையே நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் நானா பாட்டோல் சபாநாயகராக மூன்று கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments