அணை பாதுகாப்பு மசோதா - தள்ளிப்போட, மத்திய அரசு ஒப்புதல்?

0 285

தமிழக அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று, அணை பாதுகாப்பு மசோதாவை தள்ளிப்போட, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு, தமிழக அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நடப்பு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரிலேயே இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற உத்தேசித்துள்ளதாக தகவல்கள் பரவியன.

இந்தநிலையில், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, அணை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்தனர்.

பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து கோரிக்கையை நிறைவேற்றும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதைத்தொடர்ந்து அணை பாதுகாப்பு மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலோயே விவாதிக்காமல், தள்ளிப்போட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஆகியோரை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி சந்தித்து, தமிழகத்தில் 24 மணிநேரமும் மின்சாரம் தொய்வின்றி வழங்குவதற்கு தேவையான நிலக்கரி வழங்குதல் மற்றும் சிறப்பு நிதி ஒதுத்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

தொடர்ந்து, எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் மற்றும் நீலகிரி மாவட்ட குந்தா நீரேற்று புனல் மின் திட்டம் ஆகியவற்றுக்கு, சுற்று சூழல் அனுமதியை விரைந்து புதுப்பித்து வழங்குமாறு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், முல்லைப்பெரியாறு அணையின் முழு கட்டுப்பாடும் தமிழகத்திடமே தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நியாயமான கவலை காரணமாக, மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு கவனத்துடன் செயல்படுவதாக கூறியுள்ளார்.

கேரளாவின் மாநில அணை பாதுகாப்பு நிறுவனம் முல்லைப்பெரியாறு அணையிலோ, தமிழகத்தின் இதர நீர்த்தேக்கங்களிலோ அதிகார எல்லையைக் கொண்டிருக்காது எனவும் அமைச்சர் ஷெகாவத் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments