இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் - நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி விழுந்து உயிரிழப்பு

0 685

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தலைக்கவசத்தை முறையாக அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாகக் கூறப்படும் காவலர், நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

எம்.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமை காவலராகப் பணியாற்றி வந்த சாம்பிரேம் ஆனந்த் என்ற காவலர், கல்லூரணியில் படிக்கும் தனது குழந்தைகளை பள்ளி முடித்து அழைத்து செல்லுவதற்காக முத்துராமலிங்கபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் சென்ற வழியில் எதிர்பாராதவிதமாக நாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் நிலைதடுமாறி அருகிலிருந்த சாலைத் தடுப்பின் மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த காவலர் சாம்பிரேம் ஆனந்த்தை, அருகிலிருந்த மக்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து ம.ரெட்டியபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உயிரிழந்த காவலர் தலைக்கவசம் அணிந்திருந்த போதும், அதனை கழுத்துடன் இணைக்கும் “சின் ஸ்ட்ராப்” எனப்படும் பாதுகாப்புப் பட்டையை அவர் பொருத்தாமல் வாகனம் இயக்கியதே தலையில் காயம் ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது.

தலைக்கவசம் உயிர் காக்கும் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு முக்கியம் அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என்பது. எனவே தலைகவசத்துடன் சேர்த்து சின் ஸ்ட்ராப்பையும் மறவாமல் அணிவீர்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments