2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாகக் கூறி மோசடி

0 316

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு விரைவில் தடை செய்ய இருப்பதால், 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாகக் கூறி 78 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரம்பலூர் அருகே நிகழ்ந்துள்ளது.

பெரம்பலூரை சேர்ந்த சுரேஷ் என்பவன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட கும்பல், மதுரையை சேர்ந்த சௌந்தரபாண்டியன், மும்மூர்த்தி, கார்த்தி, அருண் உள்ளிட்ட 6 பேரை தொடர்பு கொண்டு, 2000 ரூபாய் நோட்டுகளை அரசு விரைவில் தடை செய்ய உள்ளதாகவும், அவற்றை 10 சதவீதம் கூடுதல் தொகையுடன் 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றி தருவதாகவும் கூறியுள்ளனர்.

இதனை உண்மை என நம்பிய அந்த 6 பேரும், கூடுதலாக 10 சதவீதம் பணம் கிடைக்கிறது என்கிற ஆசையில் 78 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை 2 கார்களில் பெரம்பலூர் வந்துள்ளனர்.

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள பாலத்திற்கு கீழே காரை நிறுத்தியவர்கள், தங்களிடம் பணத்தை மாற்றித் தருவதாக கூறிய கும்பலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் இருக்குமிடத்தை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த சுரேஷ் தலைமையிலான 3 பேர் கொண்ட கும்பல், பாலத்தின் மேற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள காரில் பணத்தை வைத்திருப்பதாகவும், இந்த பணத்தை காரில் வைத்து விட்டு அதனை எடுத்து வந்து விடுவதாகவும் கூறி அவர்களிடமிருந்த 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கி சென்றுள்ளனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் பணத்துடன் திரும்பததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த மதுரை கும்பல், காவல்துறையினருக்கு தகவலளித்துள்ளனர்.

அங்கு வந்த போலீசாரிடம்,  தாங்கள் வட்டிக்கு பணம் கொடுக்க வந்த போது மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டதாக, மதுரை கும்பல் தெரிவித்துள்ளது. ஆனால் விசாரணையின் போது முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்ததால் தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர்.

அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்ட விஷயத்தை மதுரையை சேர்ந்த ஆறு பேரும் கூறியுள்ளனர். இதற்கிடையே பணத்தை பறித்துச் சென்ற சுரேஷ் தலைமையிலான கும்பல் கூடுதலாக வட்டித் தருவதாக கூறி, ஏற்கனவே ஆன்லைன் மூலம் மோசடி செய்து கைது செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments