வீட்டிற்குள் “நாகினி” குதறிய “முனி”..! எஜமானுக்கு விஸ்வாசம்

0 550

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு ஒன்றை  வளர்ப்பு நாய் கடித்து குதறிக் கொன்றது. பாம்பை கொன்ற நாயை உரிமையாளர் குலதெய்வமாகப் போற்றும் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் பெருமாள். திங்கட்கிழமை மாலை பெருமாளும் அவரது மனைவி, மகன் ஆகியோரும் கொல்லைப்புறத்தில் இருந்துள்ளனர்.

அப்போது 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பெருமாளின் வீட்டிற்குள் நுழைந்துள்ளது. மகள் மட்டுமே வீட்டிற்குள் இருந்ததால் பாம்பைக் கண்டதும் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து வீட்டிற்குள் பாம்பு புகுந்துவிட்டதாக கூறியுள்ளார்.

மகன், மனைவியுடன் வீட்டிற்குள் வந்து பார்த்த பெருமாள் பிரமித்து போய்விட்டார். அவர் வளர்த்து வரும் செல்லப் பிராணியான முனி என்ற நாய், பெருமாள் மகளின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் வந்து பாம்புடன் சண்டையிட்டு கொண்டிருந்தது. சற்று நேரத்தில் பாய்ந்து சென்று பாம்பின் தலையை கவ்விப்பிடித்துள்ளது முனி. பாம்பின் தலை நாயின் வாய்க்குள் வசமாக சிக்கிக் கொண்ட நிலையில் நாயின் உடலை பாம்பு சுற்றிக் கொண்டது. இருந்தாலும் பாம்பை நழுவ விடாமல் சிறிது நேரத்தில் அதனை கடித்துக் கொன்று வீசியது முனி..!

பாம்பின் உடலை பார்த்தபோது அது சாரைப் பாம்பு என்பது தெரியவந்தது என்கிறார் பெருமாள். பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் பெருமாளின் செல்லப்பிராணி தனது எஜமானரின் குடும்பத்துக்கு தீங்கு நேராமல் காக்கும் பொருட்டு பாம்பை கடித்து கொன்று விசுவாசமாக நடந்து கொண்ட தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் நாயையும், நாய் கடித்து கொன்ற பாம்பையும் வியப்புடன் பார்த்து சென்றனர்.

சாரைப்பாம்பு கடித்தால் விஷமல்ல என்றாலும் தக்க சமயத்தில் தங்கள் குடும்பத்தை காத்த செல்லப்பிராணியான முனியை தங்கள் குலதெய்வமாகவே பெருமாள் குடும்பத்தினர் வணங்க தொடங்கிவிட்டனர்.

வீட்டில் நாய் வளர்ப்பது மிகவும் பாதுகாப்பானது, திருடர்கள் மட்டுமல்ல இதுபோன்ற விஷ ஜந்துக்கள் வீட்டில் நுழைந்தாலும் அவற்றின் கண்ணில் பட்டால் கடித்துக் குதறிவிடும் போர்க்குணம் கொண்டவை நாய்கள் என்கின்றனர் காவல்துறையினர்.

அதே நேரத்தில் பயன் உள்ளவரை பழகிவிட்டு, உதவி கேட்டால் விலகிச்செல்லும் உறவுகள் வாழும் இந்த காலத்தில், குடும்பத்தை காத்து நிற்கும் இந்த செல்ல பிராணியும் உண்மையிலேயே குலம் காக்கும் தெய்வம் தான்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments