இந்தியாவுக்கு வருகிறார் இலங்கை அதிபர்

0 411

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வரும் 29ந் தேதி இந்தியா வருகிறார்.

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அந்நாட்டின் அதிபராக பதவியேற்ற கோத்தபய நேற்று தமது பணிகளைத் தொடங்கினார்.

பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவரை நேரில் சந்தித்தார். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி டெல்லியில் இருந்து நேற்று மாலை கொழும்பு சென்ற ஜெய்சங்கர், உடனடியாக அதிபர் கோத்தபயவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி அனுப்பிய கடிதம் ஒன்றையும் அவர் சமர்ப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜெய்சங்கர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கோத்தபயவுடனான சந்திப்பில் இரு நாடுகளின் உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அவருடைய புதிய தலைமையில் இந்தியா- இலங்கை உறவு சிறப்பான உயரத்தை எட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிபர் கோத்தபய வரும் 29ந் தேதி டெல்லி வர இருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார். கோத்தபய பதவியேற்றபின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபயவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தபின், இந்தியாவிற்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்தார்.

இரண்டாண்டுகளுக்கு முன் இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்தை சீனா கையகப்படுத்தியது. சில மாதங்களுக்கு முன் போர்க் கப்பல் ஒன்றையும் இலங்கைக்கு அந்நாடு பரிசாக அளித்தது. மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தபோது ராணுவ ரீதியாக இலங்கை- சீனா இடையே நெருக்கமான நட்புறவு காணப்பட்டது. இந்நிலையில், மோடியின் அழைப்பை ஏற்று கோத்தபய இந்தியா வருவது அந்நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments