ஜெர்மன் முறையில் மழை நீர் சேகரிப்பு..! சென்னையில் பணிகள் தீவிரம்

0 1327

ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்திவருகின்றது. இந்த நவீன முறையின் நன்மைகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

கோடை காலத்தில் தமிழகத்தில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு போன்றவற்றை தவிர்க்க தமிழக அரசு நிர்வாகம் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக சென்னையில் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்க பொதுமக்களின் முயற்சிகள் ஒருபுறமிருக்க சென்னை மாநகராட்சி நிர்வாகமும் பொதுகட்டிடங்கள், சாலைகள், தெருக்கள், விளையாட்டு திடல்கள் , பூங்காக்கள் என மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புதிய முறையில் ஏற்படுத்தி வருகிறது.

ஜெர்மனி , அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் நவீன மழைநீர் சேகரிப்பு முறையை தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது சென்னை மாநகராட்சி.

பாலிஸ்டெரையன் எனும் மக்காத தடிமனான இந்த கலன்களில் நான்கு பக்கமும் சிறு துளைகள் இருக்கும். நான்கு அடி உயரம் மற்றும் இரண்டரை அடி அகலம் கொண்ட கலன்களை மக்காத துணியை கொண்டு மூடி பின்னர் பூமிக்கு பத்து அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி இறக்கப்படும்.

அதன் மேலே கூழாங்கற்கள் , ஜல்லி கற்கள், மணல் போன்றவைகள் கொண்டு நிரப்பப்படும். பெய்கின்ற மழைநீர் , இதுபோன்ற இயற்கை வடிகட்டி அடுக்குகள் வழியாக வடிகட்டப்பட்டு நேரடியாக நிலத்திற்குள் சென்று சுத்தமான தண்ணீராக சேகரிக்கப்படும். அறுபது டன் எடையைக் கூட சாதாரணமாக தாங்கும் தன்மைக் கொண்ட இந்த கலன்களை கொண்டு பிரதான சாலைகளுக்கு அடியில் கூட மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க முடியும் என்கிறார் இத்திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ள சிவராம்.

தற்போது நடைமுறையில் உள்ள உறைகிணறு சேமிப்பு முறையில் மழைநீர் ஒரு வழியாக மட்டுமே நிலத்திற்கு செல்லும் ஆனால் இந்த கலன்களில் நான்கு பக்கமும் துளைகள் உள்ளதால் பூமியின் அடியில் நான்கு பக்கங்கள் வழியாகவும் மழைநீர் செல்லும் என்பதால் கணிசமாக மழைநீரை நிலத்தடியில் சேகரிக்க வழிவகை செய்கிறது.

இதுபோன்ற நவீன கலன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத காரணத்தினால் தற்போதைக்கு ஜெர்மனி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கூறும் சிவராம், அறுபதாயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த மழைநீர் சேகரிப்பு கலன்களின் ஆயுட்காலம் குறைந்தது 50 ஆண்டுகள் என்கிறார்.

முதற்கட்டமாக சென்னையில், இரண்டாயிரம் இடங்களில் இதுபோன்று அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக அடுத்த ஆண்டுகளில் மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் சாலைகளிலும் கூட இத்திட்டம் அமைக்கப்படவுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் பெய்த சிறு அளவு மழைக்கே சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்றால் நீண்ட காலம் பயன் தரக்கூடிய இது போன்ற தொலைநோக்கு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நகரம் முழுவதும் நடைமுறைப்படுத்தினால் கணிசமான நிலத்தடி நீர் வளத்தை எதிகாலத் தலைமுறைக்கு விட்டுச்செல்ல முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை...!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments