ஜாமீனில் வந்த ரவுடி கொலை

0 624

கடலூர் மாவட்டம் வடலூரில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ரவுடி, ஜாமீனில் வெளியே வந்ததும் வெட்டிக் கொலை செய்யப்பட்டான்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி முரளி என்பவன் கடந்த 2017 ஆண்டு கொலை செய்யபட்டான். இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு ரவுடி கும்பலான சுந்தர், அமரன் (எ) அமர்நாத் ஜெயகுமார் உள்பட 11 பேர் கைது செய்யபட்டனர்.

மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் சுந்தர், அமரன் ஆகியோர் மட்டும் 2வருடங்களாக மத்திய சிறையில் இருந்தனர். இந்த நிலையில் முரளி கொலை வழக்கு தொடர்பான விசாரணை நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி, குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

சுந்தர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதால், அவனால் வெளியே வர முடியவில்லை. அமரன் மட்டும் ஜாமீனில் வெளியே வந்தான். முரளியின் ஆதரவாளர்களால் அமரன் உயிருக்கு ஆபத்து இருப்பதால், காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்து தனது உறவினர்கள் மூலம் காரில் தஞ்சாவூரில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு அமரன் சென்று கொண்டிருந்தான்.

அப்போது கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழி என்ற இடத்தில் டாஸ்மாக்கில் மது அருந்த சென்ற போது பின்புறமாக காரில் வந்த மர்ம கும்பல் அமரனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், முரளி கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக அவனது ஆதரவாளர்கள் விடுதலையான அன்றே அமரனை கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பாக வடலூர் போலீசார், சரவணன், சதீஷ், பார்த்திபன் ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த மூவரும் எதிர்தரப்பைச் சேர்ந்த சுந்தரின் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments