இலங்கைப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரணில் திட்டம்

0 405

ந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக, இலங்கையின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை ரணில் ராஜினாமா செய்யப் போவதாகவும், மகிந்த ராஜபக்சே பிரதமராகப் பொறுப்பேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறிசேனாவின் பதவிக்காலம் நிறைவடைவதால், இலங்கையில் புதிய அதிபரைத் தேர்வு செய்ய நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கோத்தபய ராஜபக்சே 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகள் பெற்றிருந்தனர்.

தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சஜித் பிரேமதாசாவிற்கும், சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் கோத்தபயவிற்கும் கூடுதல் வாக்குகள் கிடைத்தன. 52 புள்ளி 25 விழுக்காடு வாக்குகளை பெற்ற கோத்தபய ராஜபக்சே, அந்நாட்டின் அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அநுராதபுரத்தில் இன்று நடைபெறும் விழாவில், நாட்டின் 7ஆவது அதிபராக கோத்தபய பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கோத்தபயவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவம் மிக்க நெருக்கமான உறவை வலுவாக்கும் என்று கூறியுள்ளார்.

பிராந்தியத்தின் அமைதி செழுமை மற்றும் பாதுகாப்பிற்காகவும் இணைந்து செயல்பட விரும்புவதாக தமிழில் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மோடிக்கு நன்றி தெரிவித்து கோத்தபய வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புத்தமத தத்துவங்களின் அடிப்படையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றவும், இரு நாடுகளிடையே சகோதர உறவை வலுப்படுத்தவும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் கொழும்பில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரதமர் பதவியில் இருந்து விலகி விட்டு எதிர்க்கட்சி தலைவராக செயல்பட ரணில் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, அதிபர் பதவிக்கு போட்டியிட்ட சஜித் பிரேமதாசா, மங்கள சமரவீரா உள்ளிட்ட அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை பிரதமர் ரணிலிடம் அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments