பவானிசாகர் அணை : வெள்ள அபாய எச்சரிக்கை...

0 443

முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 17ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32புள்ளி 8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரியில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு ஏழாயிரத்து 624 கனஅடியாக இருந்த நீர்வரத்து,10 மணியளவில் 10 ஆயிரத்து 300 கனஅடியாக அதிகரித்தது. பிற்பகல் நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 17ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 14 ஆயிரத்து 900 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாயிரத்து 100 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

அணைக்கு வரும் மொத்த உபரிநீரும் வெளியேற்றப்படுவதால், பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரையிலான ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அணையின் மேல்பகுதியில் முகாமிட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments