தென்பெண்ணையாறு விவகாரம்.. திமுக புகாருக்கு அமைச்சர் பதில்..!

0 176

தென்பெண்ணை ஆறு தொடர்பான, நதிநீர் பிரச்சினையில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். 

பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்த புகாருக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், நதிநீர் பங்கீட்டு உரிமைகளில் அதிமுக அரசு அக்கறை காட்டுவதில்லை என துரைமுருகன் குறை கூறியிருப்பது விந்தையாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

தென்பெண்ணையாறு விவகாரத்தில், கர்நாடக அரசிடமிருந்தும், மத்திய அரசிடமிருந்தும் சாதகமான பதில் வரப்பெறாத நிலையில், இயற்கையாக ஓடுகின்ற நீரை கர்நாடக அரசு தடுத்து நிறுத்த கூடாது என உத்தரவிடுமாறு, கடந்தாண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்திருப்பதை, அமைச்சர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு மேற்கொள்ளும் அணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில், கடந்த ஜூலை மாதம் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இடைக்கால மனுவை மட்டுமே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதையும், அசல் வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதையும் அறியாமல், அரசியல் காரணங்களுக்காக துரைமுருகன் கூறுவதை மக்கள் நன்கறிவார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

காவிரி நதிநீர் பிரச்சனையில் திமுக இழைத்த தவறுகளை மறைக்கவே, உண்மைக்குப் புறம்பான தகவல்களை துரைமுருகன் கூறிவருவதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருக்கிறார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments