இலங்கை அதிபர் தேர்தல் முடிவு - கோத்தபய ராஜபக்சே வெற்றி

0 894

இலங்கை அதிபர் தேர்தலில், 52.25 விழுக்காடு வாக்குகளை பெற்றிருக்கும் கோத்தபய ராஜபக்சே, வெற்றிப்பெற்றதாக, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதிபர் தேர்தலில் வாகை சூடிய கோத்தபயவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதம் 9ஆம் தேதி முடிவடைகிறது. இதையொட்டி, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 12,845 வாக்குச்சாவடிகளில், நேற்று நடைபெற்றது. இதில் 81 புள்ளி 52 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி, நேற்றிரவில் தொடங்கி நடைபெற்றது. பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சேவுக்கும், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

பிற்பகல் 3.30 மணியளவில் வெளியிடப்பட்ட இறுதி வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, கோத்தபய ராஜபக்சே 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகள் பெற்றுள்ளார்.

சஜித் பிரேமதாசாவை விட, 13 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்றதாக, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான திரிகோணமலை, கண்டி, வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில், பதிவான மொத்த வாக்குகளில், 75 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை, சஜித் பிரேமதாசா பெற்றார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கோத்தபயவுக்கு மிக குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன.

இருப்பினும், சிங்களர்கள் அதிகம் வசிக்கும், கொழும்பு, பொலன்னறுவை, கம்பஹா, ஹம்பன்தோட்டா, நுவரெலியா, புத்தளம், மொனராகலை, உள்ளிட்ட மாவட்டங்களில், கோத்தபய ராஜபக்சே அதிகளவிலான வாக்குகளை தனதாக்கியிருக்கிறார்.

50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றுவிட்டால், அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அத்தகையை பெரும்பான்மையை யாரும், தனதாக்காவிட்டால், வாக்காளர்களின் இரண்டாவது தேர்வை அடிப்படையாக கொண்டு, வெற்றி நிர்ணயிக்கப்படும்.

இந்த வகையில், இலங்கை அதிபர் தேர்தலில், 52 புள்ளி 25 விழுக்காடு வாக்குகளை பெற்றிருக்கும் கோத்தபய ராஜபக்சே, அந்நாட்டின் அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது, கடுமையான போட்டியை அளித்த சஜித் பிரேமதாசா 42 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியிருக்கிறார்.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, தங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இருநாடுகளுக்கு இடையே, நெருக்கமான, சகோதரத்துவ உறவுகளை மேலும் ஆழமானதாக மாற்ற முடியும் எனக் கூறியிருக்கிறார்.

தன்னை வாழ்த்திய, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள கோத்தபய, தங்களுடன் பேசும் நாளை, தாமும் எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் முன்னாள் அதிபரும், மூத்த சகோதரருமான மகிந்தா ராஜபக்சே, நடப்பு அதிபரான மைத்திரிபால சிறிசேனா உள்ளிட்ட தலைவர்களும், கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே, தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சே, நாளை, இலங்கையின் பண்டைய கால தலைநகராக விளங்கிய அநுராதபுரத்தில் நடைபெறும் விழாவில், நாட்டின் 7ஆவது அதிபராக பதவியேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மகிந்த ராஜபக்சேவிற்கு நாளை பிறந்தநாள் என்பதால், தனது அண்ணனின் பிறந்தநாளில், கோத்தபய பதவியேற்க இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments