சங்கடத்தில் சங்கத்தமிழன்..!

0 759

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று 3-வது முறையாக அறிவிக்கப்பட்ட சங்கத்தமிழன் படம் இந்த முறையும் வெளியாகாததால் பழம்பெரும் படதயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்சன்ஸ் பங்குதாரர்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கோடிகளை கொடுக்காமல் கைவிரித்ததால் நிகழ்ந்த சங்கடம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி ராமாராவ் என மூன்று முதல் அமைச்சர்களின் திரைப்படங்கள், ரஜினியின் உழைப்பாளி, அஜீத்தின் வீரம், விஜய்யின் பைரவா உள்ளிட்ட 3 தலைமுறை முன்னணி நடிகர்களின் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களைத் தயாரித்த பழம்பெரும் படதயாரிப்பு நிறுவனம் நாகிரெட்டியின் விஜயா புரொடக்சன்ஸ் ..! நாகிரெட்டிக்கு பின்னர் வெங்கட்ராம ரெட்டியும், பாரதி ரெட்டியும் பங்குதாரர்களாக இருந்து தொடர்ந்து படங்களைத் தயாரித்துவந்தனர்.

தற்போது இந்த படத் தயாரிப்பு நிறுவனத்தை பாரதிரெட்டி நிர்வகித்து வருகிறார். இந்த நிறுவனம் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து சங்கத்தமிழன் என்ற படத்தை ஆரம்பித்தது முதல் தொடர் சோதனைகளை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

வழக்கமான சம்பளத்தை விட அதிகமாக சம்பளம் பேசப்பட்ட நிலையில், குறிப்பிட்ட நாட்களில் விஜய் சேதுபதி நடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்ததால் நிர்ணயித்த அளவை காட்டிலும், படத்தின் பட்ஜெட் எகிறியதாக கூறப்படுகின்றது.

கடந்த சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட சங்கத்தமிழன், படப்பிடிப்பே முடிவடையாததால் தள்ளிப்போனது. ஒரு வழியாக படம் தயாரானதும் லிப்ரா புரொடக்சன்ஸ் சந்திரசேகரன் என்பவர், தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை 11 கோடி ரூபாய்க்கு விலை பேசி 3 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்துப் பெற்றுள்ளார். அதனை ஏரியாவாரியாக பிரித்து விற்று 8 கோடி ரூபாய் வரை பணம் பார்த்த அவர், படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாகவும் அறிவித்தார். போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் படம் தள்ளிப் போனது.

அதே நேரத்தில் தயாரிப்பாளர் பாரதி ரெட்டிக்கு கொடுக்க வேண்டிய 8 கோடி ரூபாயை கொடுக்காமல் இழுத்தடித்து வந்த லிப்ரா சந்திர சேகரன். பட வெளியீட்டுக்கு முன்பாக தருவதாக கூறியுள்ளார். இறுதி கட்டத்தில் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கைவிரித்ததால், பணத்தை கொடுத்து விட்டு படத்தை வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் லிப்ரா சந்திர சேகரன் மீது புகார் அளிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தொடர்ந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இழுத்துக் கொண்டே போனதால் சங்கத்தமிழன் வெள்ளிக்கிழமை வெளியாகவில்லை. இதற்கு தீர்வு கிடைக்காது என்பது போல விஜய் சேதுபதியே விரக்தியில் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இறுதியில் லிப்ரா சந்திர சேகரன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பணத்தில் 60 சதவீதம் மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில், படத்தின் வசூலில் கிடைக்கும் கூடுதல் வருவாயை முழுமையாக தயாரிப்பாளர் மட்டுமே எடுத்துக் கொள்வது என்ற ஒப்பந்தத்தின் பேரில் படத்தை வெளியிட விஜயா புரொடக்சன்ஸ் அனுமதி அளித்தது.

இதற்கிடையே அஜீத்தின் வீரம் படம் வெளியானபோது அதற்கு அரசின் வரி விலக்கு கிடைக்காததால், வசூலை வாரிக்குவித்த தயாரிப்பு நிறுவனம் அரசுக்கு செலுத்திய ஒன்றே கால் கோடி ரூபாய் வரித்தொகையை தாங்களே தருவதாக, சேலம் விநியோகஸ்தர்களுக்கு உறுதி அளித்ததாக கூறப்படுகின்றது.

அந்த தொகையை இதுவரை வழங்காததால் அவர்கள் ஒரு பக்கம் சங்கத்தமிழனுக்கு தடை போட, அந்த தொகையில் 40 லட்சம் ரூபாய் வரை கொடுப்பதாக பேசி அந்த பிரச்சனையையும் முடித்து வைத்துள்ளனர்.

அதோடில்லாமல் லிப்ரா சந்திர சேகரன் நெல்லை விநியோகஸ்தர் ஒருவருக்கு முந்தைய படத்திற்கு 15 லட்சம் ரூபாய் பாக்கி வைத்ததால் சங்கத்தமிழன் படத்தை நெல்லையில் வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளனர். அதனையும் தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு உறுப்பினர்கள் பேசி தீர்த்து வைத்துள்ளனர்.

இதையடுத்து தடைகளை மட்டுமல்ல பலரது சங்கடங்களையும் கடந்து ஒரு வழியாக சனிக்கிழமை தமிழகம் முழுவதும் சங்கத்தமிழன் வெளியாகி உள்ளது. பலகோடி சொத்துக்கள் கைவசம் உள்ள பழம்பெரும் நிறுவனத்துக்கே இத்தனை சிக்கல், சிரமம் என்றால் தமிழ் திரை உலகில் வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் நிலை அந்தோ பரிதாபம் தான்..!

இதனிடையே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள லிப்ரா புரொடெக்ஷன்ஸ் நிர்வாகத்தினர், பல தடைகளையும், அவமானங்களையும் கடந்து 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சங்கத்தமிழன் படத்தை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கான பதிலும் உண்மையும் தெரிந்தும் எதையும் வெளியில் சொல்லாமல் விஜயா புரொடக்சன்ஸுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றியுள்ளதாக லிப்ரா சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments