எனது மகளுக்கு ஐஐடியில் மிக கடினமான நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது - பாத்திமா தந்தை

0 756

தனது மகள் பாத்திமா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவரது தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார். 

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் தொடர்பாக அவரது தந்தை அப்துல் லத்தீப், டிஜிபி திரிபாதியை சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்துல் லத்தீப், தனது மகள் தற்கொலை செய்த பின்னர் அவரது செல்போனை ஏன் போலீஸ் ஆய்வு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய அப்துல் லத்தீப், அந்த செல்போனின் ஸ்க்ரீனிலேயே இணை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் பற்றிய குறிப்பு இருந்ததாக கூறினார்.

கடந்த 8 ஆம் தேதி கடைசியாக தனது மகள் செல்போனில் தன்னுடன் பேசிய போது மன கஷ்டத்தில் இருந்தது போல் தோன்றியதாக அவர் கூறினார். மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்திருப்பார்  என்பதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 

இணை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மீது தனது மகள் பாத்திமாவுக்கு ஒருவித அச்சம் இருந்தது என்றும், அதை ஏற்கனவே தன்னிடம் கூறியிருப்பதாகவும் அப்துல் லத்திப் குறிப்பிட்டார்.  சுதர்சன் பத்மநாபனிடம் இருந்து எந்த  விதமான துன்புறுத்தல் பாத்திமாவுக்கு கொடுக்கப்பட்டது என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

தனது மகள் தற்கொலை செய்த பின்னர் ஐஐடி நிர்வாகம் சார்பில் ஆறுதல் வார்த்தை கூட யாரும் பேசவில்லை என்று அவர் வேதனை தெரிவித்தார். தற்கொலை தொடர்பான சிசிடிவி உள்ளிட்ட பதிவுகளை ஐஐடி நிர்வாகம் காட்டவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

தனது மகள் பாத்திமா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், தனது மகள் மரணத்தில் நீதி கிடைத்தே ஆக வேண்டும் என்றும் அப்துல் லத்தீப் வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சென்னை கிரின்வேஸ் சாலையிலுள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு சென்ற அப்துல் லத்தீப், பாத்திமா மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments