ஐஐடி மாணவி தற்கொலை... 3 பேராசிரியர்களிடம் விசாரணை

0 403

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் புகாருக்குள்ளான 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, கடந்த 9-ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு அங்கு பணிபுரிந்து வரும் இணை பேராசிரியர் ஒருவர்தான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இரண்டு உதவி பேராசிரியர்களின் பெயரையும் பாத்திமா அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் கூடுதல் துணை ஆணையர் பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி மெஹலினா தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு வியாழக்கிழமையே புகாருக்குள்ளான பேராசிரியர்களிடம் விசாரணை தொடங்கியது.

மூவரிடமும் தனித்தனியே விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வகுப்புத் தோழிகள், விடுதி தோழிகள், விடுதி காப்பாளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மாணவியின் செல்போன் ஆய்வுக்காக காவல் ஆணையர் அலுவலக சைபர் கிரைம் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், மாணவி பாத்திமா லத்தீப்பின் தற்கொலை குறித்த போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரண முடிவதற்கு முன்பே சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகள், மாணவர்கள், பேராசிரியர்கள் விரக்தியடையும் விதத்திலும் ஐஐடி நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் சென்னை ஐஐடி நிறுவனம் குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments