ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றி ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு

0 392

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.  

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, கடந்த 9-ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலைக்கு இணை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், உதவி பேராசிரியர் ஹேமசந்திரன் கரா, இணை பேராசிரியர் மில்லிந்த் பிராமே ஆகியோரது பெயரையும் தற்கொலை குறிப்பில் மாணவி பாத்திமா லத்தீப் குறிப்பிட்டிருந்தார். கேரள முதல்வரை நேரில் சந்தித்த மாணவியின் பெற்றோர் இது குறித்து முறையிட்டதை அடுத்து, கேரள முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு முழுமையான விசாரணைக்கு வலியுறுத்தினர்.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கிண்டியில் உள்ள ஐஐடிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஐஐடி இயக்குனர் மற்றும் துறை பேராசிரியர்களை சந்தித்து அவர் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

சுமார் ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட இந்த விசாரணையின் போது மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஷ்வரமூர்த்தி, கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாணவியின் தற்கொலை வழக்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுவதாகவும், கூடுதல் துணை ஆணையர் பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி மெஹலினா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு சிறப்பு விசாரணை குழு புலனாய்வு செய்யும் எனவும் அவர் கூறினார். 

இதனிடையே இந்தியர் மாணவர் சங்கம், மாணவர் காங்கிரஸ், சமூக நீதி மாணவர் இயக்கம், முஸ்லிம் மாணவர் பேரவை உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் ஐஐடி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்படும் பேராசிரியர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். கடந்த இரண்டு நாட்களாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். 

ஐஐடி மாணவர்களும் வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஐஐடி இயக்குனரிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர் நாளை தமிழகம் வந்து முதலமைச்சரை நேரில் சந்திக்கவும், காவல் துறை அதிகாரிகளை சந்தித்து எழுத்து பூர்வமாக புகாரும் அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments