மின்சாரத்தை துண்டிக்காமல்..மின் பழுது நீக்கம்.!

0 448

மின் பழுது ஏற்பட்டால், மின்சாரத்தை துண்டிக்காமலேயே, பாதுகாப்பான முறையில், பழுது நீக்கும் திட்டம், நாட்டிலேயே முதன்முறையாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது.

இதன்மூலம், தடையற்ற மின்விநியோகம் உறுதி செய்யப்படுவதாக, மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார். 

வழக்கமாக, உயர் அழுத்த மின் கோபுரங்கள், மின்சார கடத்திகளான கம்பி வடங்கள், துணை மின் நிலையங்களுக்கான மின் வழித்தடங்கள் ஆகியனவற்றில், பழுது ஏற்பட்டால், மின்சாரத்தை முழுமையாக துண்டித்து, அதன்பிறகு, பழுது எங்கு ஏற்பட்டுள்ளது என கண்டுபிடித்து, சரி செய்யப்படும்.

இவ்வாறான முறையில் பழுதை நீக்குவதற்கு, பல மணி நேரங்கள் ஆகும். இந்த நிலையை, தமிழ்நாடு மின்சார வாரியம் அடியோடு மாற்றியிருக்கிறது.

இதன்படி, உயர் அழுத்த மின் கோபுரங்கள், மின்வழித் தடங்கள், உயர் அழுத்த மின் கம்பி வடங்களில் பழுது ஏற்பட்டால், மின்சாரத்தை துண்டிக்காமலேயே, பாதுகாப்பான முறையில், பழுது நீக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மின்சார பழுதை நீக்கும் திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழ்நாட்டில் தான் அறிமுகமாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர் அழுத்த மின் வழித்தடங்களில், லைவ்-ஆக மின் பழுது நீக்கப்படுவது பற்றி, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அமைச்சர்கள் அமைச்சர்கள் பாண்டியராஜன், பென்ஜமின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்....

அப்போது பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின்சாரத்தை துண்டிக்காமல், லைவ்-ஆக மின் பழுதை நீக்கும் முறை மூலம், உதாரணமாக, 4 மணி நேரம் மின்தடை ஏற்படும் என்றால், புதிய முறையால், அரை மணிநேரமாக குறைந்திடும் எனத் தெரிவித்தார்.

உயர் அழுத்த மின்கோபுரங்களில் மின் பழுது ஏற்பட்டால், மின்சாரத்தை துண்டிக்காமல் லைவ் ஆக சரிசெய்யும் பணிகளில் பிரத்யேக பயிற்சி பெற்ற பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதற்காக, பெங்களூருவில் உள்ள மின்னுளப்பாதை பயிற்சி நிறுவனத்தில், அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு, பெங்களூருவில் பயிற்சி பெற்ற 160 பேர், பல்வேறு குழுக்களாக பிரிந்து, சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட கோட்டங்களில், பணியாற்றி வருகின்றனர். 

குறிப்பாக, உயர் அழுத்த மின்கோபுரங்கள், மின்கம்பி வட தடங்களில் ஏற்படும் பழுதுகளை, ட்ரோன்களை அனுப்பி முதலில் கண்டறிகின்றனர்.

பின்னர், அந்த குறிப்பிட்ட பகுதியில், ஹைட்ராலிக் ஏணியுடன் கூடிய சிறப்பு வாகனத்தை எடுத்துச் சென்று, அந்த ஹைட்ராலிக் ஏணி மூலம், பழுது ஏற்பட்ட இடத்தை அடைவர்.

பின்னர், உயர் அழுத்த மின்சாரம் உடலில் பாயாத வகையில் தயாரிக்கப்பட்ட பிரத்யேகை உடையை அணிந்து, மின்சாரத்தை துண்டிக்காமல், மின் பழுதை நீக்குவர்.

இதுபோன்று, மின்சாரத்தை துண்டிக்காலம், லைவ் ஆக மின் பழுது நீக்கப்படுவதால், உதாரணத்திற்கு, 4 மணி நேரம் ஏற்படக்கூடிய மின் தடை, வெறும் அரை மணி நேரமாக குறையும் என்பதால், தடையற்ற மின்விநியோகம் உறுதி செய்யப்படுகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments