சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை - என்ன நடந்தது என புலன் விசாரணை மூலம் வெளிவரும் - ஏ.கே.விஸ்வநாதன்

0 418

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அங்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் விசாரணை நடத்தினார். மேலும் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, கடந்த 9ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதலில் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதே மாணவியின் தற்கொலைக்கு காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், மாணவியின் இறுதிச் சடங்குக்கு பின்னர், அவரது செல்போனை ஆய்வு செய்த போது, தனது தற்கொலைக்கு இணை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மற்றுமொரு பதிவில் மேலும் 2 பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்த மாணவி, அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் பதிவிட்டிருந்தார். அந்த பதிவுகள் தற்கொலைக்கு முந்தைய நாளான 8ம் தேதி பதிவிடப்பட்டிருந்தன.

இதனை அடுத்து மாணவியின் செல்போன் தடவியல் துறைக்கு அனுப்பட்டு அந்த பதிவுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவர் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு இன்று சென்னை ஐஐடி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற, இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 30 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. மேலும் மாணவியின் செல்போன் பதிவைக் குறிப்பிட்டு, பிரதமர் அலுவலகத்துக்கும் அவரது பெற்றோர் நடவடிக்கை கோரி கடிதம் எழுதியுள்ளனர். மாணவியின் பெற்றோர் தமிழக முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், நேரம் கிடைத்ததும் முதலமைச்சரை சந்தித்த பின்னர், தமிழக டிஜிபியிடம் எழுத்துப்பூர்வமாக புகாரளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், காவல் இணை ஆணையர் சுதாகர், மற்றும் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் சென்னை ஐஐடிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாணவியின் தற்கொலை வழக்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments