இந்தியா அசுர வேகம் - சுருண்டது வங்கதேசம்

0 491

இந்தியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், வங்கதேச அணி 150 ரன்களில் சுருண்டது. 

இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக சாத்மன் இஸ்லாமும், இம்ருள் கயசும் களமிறங்கினர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அவர்கள் இருவரும் தலா 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அந்த அணியின் கேப்டன் மொனுமில் ஹக்யூ, பொறுப்பை உணர்ந்து நிதானமாக ஆடினார். மறுமுனையில் ஆடிக் கொண்டிருந்த முகமது மிதுனை, முகமது சமி அவுட்டாக்கினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய முஸ்பிகுர் ரகீம், கேப்டனுடன் சேர்ந்து பொறுமையாக ஆடினார். இந்த ஜோடி ஓரளவு ரன் சேர்த்த நிலையில், கேப்டன் மொனுமிலை அஸ்வின் வெளியேற்றினார். 43 ரன்கள் எடுத்த போது ரகீமும் ஆட்டமிழக்கவே, பின் வரிசை வீரர்கள் வரிசையாக அவுட்டாகி நடையைக் கட்டினர்.

இறுதியில் வங்கதேச அணி 150 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் மொனுமில்லின் விக்கெட்டைக் கைப்பற்றிய அஸ்வின், சொந்த மண்ணில் விரைவாக 250 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments