மீன் தொட்டிக்குள் விழுந்த குழந்தை பலி..! அலட்சியம் வேண்டாமே

0 515

ரூர் அடுத்த மாயனூர் அருகே 2 வயது சிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பலியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றரை அடி உயர சிமெண்ட் தொட்டிக்குள் கிடந்த மீன் குஞ்சுகளை எட்டிப்பார்த்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த உள்ளிக் கோட்டை கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி - சுகந்தி தம்பதியின் 2 வயது மகன் ஹரிதேஷ்தான் தொட்டித் தண்ணீரில் விழுந்து பலியான சிறுவன்..! 

சுகந்தி தனது மகன் ஹரிதேஷ் உடன் கரூர் மாவட்டம் மாயனூரை அடுத்த மணவாசியில் உள்ள தனது தந்தை சக்திவேல் வீட்டிற்கு வந்துள்ளார். அழகாகவும், சுட்டித் தனமாகவும் இருந்த சிறுவன் ஹரிதேஷுடன், அப்பகுதி மக்கள் ஆசையாக கொஞ்சி விளையாடுவது வழக்கம். சுட்டிப்பையனான அவன் அருகில் உள்ள வீடுகளுக்கும் சென்று விளையாடி வந்துள்ளான்.

இந்த நிலையில் புதன்கிழமை மதியம் சிறுவனின் தாய் சுகந்தி கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், வீட்டை விட்டு வெளியேறி எதிர்புறம் இருந்த இளங்கோவன் என்பவரது வீட்டிற்குச் சென்றுள்ளான்.

அங்கு ஒன்றரை அடி உயரம் உள்ள தண்ணீர் தொட்டியில் மீன்கள் நீந்துவதை கண்டு உற்சாகமடைந்தான் அந்த சிறுவன். கையை தண்ணீருக்குள் விட்டு வேடிக்கை பார்த்தபோது எதிர்பாராத விதமாக தவறி தொட்டிக்குள் விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி சிறுவன் ஹரிதேஷ் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

வீட்டில் கண் விழித்த சுகந்தி குழந்தையை காணாது அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காததால் எதிர்வீட்டின் தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது சிறுவன் தண்ணீரில் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

இதனையடுத்து குழந்தையை மீட்ட தாயும், உறவினர்களும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதைஅடுத்து சிறுவனின் உடல் சொந்த ஊரான உள்ளிகோட்டைக்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

குழந்தையை கவனிக்காமல் அயர்ந்து தூங்கிய தாயின் அலட்சியத்தாலும், தண்ணீர்த் தொட்டியை மூடிவைக்காமல் மெத்தனமாக திறந்து வைத்ததாலும் 2 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விபரீத சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

வீட்டில் தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டிகளையும், பேரல்களையும் குழந்தைகளோ, சிறுவர்களோ எளிதில் பயன்படுத்த இயலாதவாறு மூடிவைப்பது அவசியமாகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments