சீன-ரஷ்ய அதிபர்களுடன் மோடி சந்திப்பு..!

0 262

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி ரஷ்யா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தீவிரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.

இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் நாட்டிற்கு சென்றுள்ளார்.பிரேசிலியா விமான நிலையத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநாட்டிற்காக வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுடன் இருதரப்பு நல்லுறவுகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். தீவிரவாதத்தை கூட்டாக எதிர்ப்பதற்கான செயல்திட்டங்கள் வகுப்பது குறித்தும், பிரிக்ஸ் நாடுகளுடன் பொருளாதார வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, பாதுகாப்பு , வர்த்தகம் தொடர்பான 15 முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டன. இந்த சந்திப்புகள் இருநாட்டு உறவுகளை பலப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

2025ம் ஆண்டுக்குள் இரு நாடுகளும் 25 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், பல ஆண்டுகள் முன்பாகவே அந்த இலக்கு எட்டப்பட்டு விட்டதாக மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இதையடுத்து சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். மாமல்லபுரத்தில் ஜின்பிங்குடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இச்சந்திப்பு நடைபெற்றது. சென்னையில் சீன அதிபருடனான சந்திப்பு, இரு நாடுகளின் நட்புப் பயணத்திற்கு புத்துணர்வு அளித்திருப்பதாக மோடி குறிப்பிட்டார்.

இந்திய சீனா எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணவும், எல்லையில் அமைதியை காக்கவும், எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவும் இருநாடுகளிடையே அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவினர் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தவும் இந்த சந்திப்பின்போது ஒப்புதல் வழங்கப்பட்டது.

முன்னதாக பிரேசில் அதிபர் போல்சோனாரோவும், மோடியும் சந்தித்துப் பேசினார்கள். 2020ம் ஆண்டின் குடியரசுதினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக டெல்லி வருமாறு வருமாறு பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுக்க, அதனை பிரேசில் அதிபர் போல்சோனாரோ மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். இந்தியர்களுக்கு விசா இல்லாமல் வரலாம் என அனுமதியளித்த பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். உலகம் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த நிலையிலும் பிரிக்ஸ் நாடுகள்தாம் அதன் 50 சதவீதம் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, உலகின் கோடிக்கணக்கான மக்கள் இதனால் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக கூறினார்.

பிரிக்ஸ் நாடுகள் சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். இந்த மாநாட்டில் சீனா,ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா,நாடுகளின் தலைவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments