பிரிக்ஸ் மாநாடு இன்று தொடக்கம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..!

0 277

சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி வழியாக பிரேசிலியாவிற்கு பயணமாகி உள்ளார்.

பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளின் மாநாடு பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகரில் இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் நேற்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றார். ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரை சென்றடைந்த மோடி, சிறிது நேர ஓய்வுக்குப் பின் பிரேசிலியாவிற்கு புறப்பட்டார்.

‘வளமான எதிர்காலத்துக்கான பொருளாதார வளர்ச்சி’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டின்போது, பயங்கரவாத எதிர்ப்பு விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாகவும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பிரிக்ஸ்’ நாடுகளின் தொழிற்துறையினர் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு வங்கியைச் சேர்ந்த அதிகாரிகளையும் சந்தித்துப் பேச உள்ளார்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி 6வது முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசவுள்ளார்.

பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோவுடன் (Jair Bolsonaro) பிரதமர் மோடி நடத்தும் இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, பாதுகாப்பு, வர்த்தகம், வேளாண்மை, எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments