தேச பக்தி அவசியம்.. பிரதமர் மோடி வேண்டுகோள்..!

0 875

அயோத்தி வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல தோல்வியும் அல்ல எனக் கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, ராமர் பக்தராக இருந்தாலும், ரஹீம் பக்தராக இருந்தாலும் தேச பக்தியை பலப்படுத்த வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார். 

அயோத்தி வழக்கில் குறிப்பிடத்தக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, எந்த ஒரு பிரச்சனைக்கும் சட்ட நடவடிக்கைகள் மூலம் இணக்கமாக தீர்வு காண முடியும் என்பதற்கு இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டு எனக் குறிப்பிட்டார்.

இந்த தீர்ப்பானது, நமது நீதித்துறையின் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை மற்றும் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் உறுதி செய்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தெளிவாக எடுத்துரைப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.

நூற்றாண்டுகள் கடந்த ஒரு பிரச்சனையை நீதிமன்றம் இணக்கமாக முடித்து வைத்திருப்பதாகக் கூறிய மோடி, ஒவ்வொரு தரப்பும் தங்களது வாதங்களை முன் வைக்க போதிய அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பின் மூலம் நீதித்துறை நடைமுறை மீதான மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

தீர்ப்புக்குப் பின்னர் 130 கோடி மக்கள் கடைபிடிக்கும் அமைதி, இந்தியாவின் உள்ளார்ந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் பிரதமர் மோடி மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார். ராமர் பக்தராக இருந்தாலும், ரஹீம் பக்தராக இருந்தாலும் தேச பக்தியை பலப்படுத்த வேண்டியது கட்டாயம் எனவும், இந்த ஒற்றுமை உணர்வு நமது நாட்டை வளர்ச்சிக்கான பாதையில் அழைத்துச் செல்லும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments