சவுடு மண் எடுக்க தடை: வழக்கை திரும்பப்பெறும் மனுதாரர்... நீதிபதிகள் சந்தேகம்

0 323

13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க தடை விதிக்கப்பட காரணமாக இருந்த மனுதாரர் திடீரென மனுவை திரும்பப் பெறுவதாக கூறியதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் பல்வேறு சந்தேகங்களைக் கூறி கேள்விகளை எழுப்பினர். மனுதாரர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டனர். 

ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைக்குட்டத்தைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர் தொடுத்த வழக்கில், 13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

அந்த வழக்கை திரும்பப் பெறுவதாக இன்று காலையில் மனுதாரர் நாகேந்திரன் தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதி அளித்தனர். பின்னர் மாலையில் திடீரென மனுதாரரின் வழக்கறிஞர், வழக்கை திரும்ப பெற அனுமதித்ததை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், " இந்த வழக்கில் மனுதாரரின் செயல்பாடுகளை பார்க்கும் போது, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அலுவலர்களின் தலையீடு இருப்பதாக தோன்றுகிறது. வழக்கில் இடைக்கால உத்தரவிருக்கும் நிலையில் வழக்கை திரும்பப்பெற அனுமதியளித்த போது அரசுத்தரப்பில் எதிர்பு தெரிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, மனுதாரர் தன் தரப்பு வழக்கறிஞரை எதற்காக மாற்றினார்? இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதனை மறைத்து மனுவைத் திரும்பப் பெற காரணம் என்ன? எது மனுதாரரின் மனதை மாற்றியது? என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது என்று கூறிய நீதிபதிகள் மனுதாரர் நவம்பர் 11ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் 11ம் தேதி மனுதாரர் ஆஜராவதை ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments