மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னாவிஸ் ராஜினாமா..! சிவசேனாவுக்கு நிதின் கட்கரி கெடு

0 934

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னாவிஸ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை இன்று மாலை சந்தித்த முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னாவிஸ், தனது ராஜினா கடிதத்தையும், தனது தலைமையிலான அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தையும் அளித்தார். இந்த சந்திப்பு, சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர ஃபத்னாவிஸ், தமது பதவிவிலகல் கடிதத்தையும், அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். 5 ஆண்டுகளாக மகாராஷ்டிரா மக்களுக்கு சேவை செய்தது, மனநிறைவை அளிப்பதாக ஃபத்னாவிஸ் கூறினார். 

மகாராஷ்டிரா அரசியல் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், மும்பை வந்த மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி, அமைச்சரவையில் பாதிக்கு, பாதி இடங்கள் என்ற கோரிக்கையை சிவசேனா கைவிடும் வரை, பேச்சுவார்த்தை கிடையாது என்றார்.

பாஜக தலைமையில் ஆட்சி என்பதை ஏற்றுக் கொண்டால், தாமே முன்னின்று, மத்தியஸ்தம் செய்துவைக்க தயார் என நிதின் கட்கரி கூறினார்.

சிவசேனா நிறுவனர் பால் தாக்ரே, முன்பொருமுறை வலியுறுத்தி கூறியது போன்று, எக்கட்சி அதிக இடங்களை பெறுகிறதோ, அக்கட்சியை முதலமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பதை, நிதின்கட்கரி நினைவு கூர்ந்தார்.

இந்நிலையில், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, மத்திய இணையமைச்சரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே சந்தித்துப் பேசினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், வாக்களித்த மக்களுக்கு மதிப்பளித்து, பாஜக-சிவசேனா கூட்டணி அரசு அமைய, இருகட்சிகளும் முயற்சிக்க வேண்டும் என்றார். இதுகுறித்து தான், ராம்தாஸ் அத்வாலே தன்னுடம் விவாதித்தாக சரத்பவார் கூறினார். 

பாஜகவின் தூதுவராக மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வந்து சென்றிருக்கலாம் என்று தகவல் வெளியான சில மணித்துளிகளில், சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், சரத்பவாரை சந்தித்துப் பேசினார்.

மகாராஷ்டிராவின் 13ஆவது சட்டப்பேரவையின் பதவிக்காலம், நாளையுடன் முடிவடைகிறது. ஆனால், பாஜக-சிவசேனா கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் பனிப்போரால், மகாராஷ்டிரா அரசியலில் புதிய ஆட்சி அமைவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில், சிவசேனா எம்எல்ஏக்கள் மும்பை மேற்கு பந்தராவில் உள்ள ரங்சாரதா நட்சத்திர விடுதியிலும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றிலும் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, சிவசேனா ஆதரவுடன், பாஜக ஆட்சி அமையாவிட்டால், மகாராஷ்டிராவில், குடியரசு தலைவர் ஆட்சி அமலாவதற்கு வாய்ப்பு ஏற்படும். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments