சோனியா, ராகுலுக்கு சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ்?

0 533

சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1984-ம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபின் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப் பிரிவு உருவாக்கப்பட்டது.

கடந்த 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபின் எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு,  அனைத்து முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவது என மாற்றியமைக்கப்பட்டது.

அந்த வகையில், பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்களின் குடும்பத்தினர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு மட்டும் ஏறக்குறைய 3 ஆயிரம் எஸ்பிஜி அதிகாரிகள் பாதுகாப்பளிக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை எஸ்பிஜி பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், அமைச்சரவைச் செயலாளர், உளவு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தும். அந்த ஆலோசனை கடந்த மே மாதத்தில் நடைபெற்றபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற்று அதற்கு பதிலாக இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் எஸ்பிஜி பாதுகாப்பையும்  மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி அவர்களுக்கு, எஸ்பிஜி பாதுகாப்பைவிட ஒரு படி குறைவான இசட் பிளஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் பயிற்றுவிக்கப்படும் கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்பிஜி பாதுகாப்பு தேவைப்படும் அளவுக்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அண்மைக்காலமாக அச்சுறுத்தல்கள் ஏதுமில்லை என்ற உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments