மரகதநாணயம் சினிமா போல நரபலி திகில்..! சிவலிங்கா மர்மம் விலகியது

0 441

சிவலிங்கத்தில் வைரம் இருப்பதாக நம்பி 3 பேரை கொலை செய்து , சுத்தியல் கொண்டு சிவலிங்கத்தை உடைக்க முயன்ற கொள்ளை கும்பலை ஆந்திரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வைரத்தை எடுக்கவிடாமல் பாம்பு துரத்தும் என்று புற்றை சுற்றி விலங்கின் ரத்தம் தெளிக்கப்பட்ட திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

மரகத நாணயம் என்ற படத்தில் மன்னர் கால மரகத நாணயத்தை தொட்டவர்களை பழைய லாரி ஒன்று விரட்டிச் சென்று கொல்லும் என்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றும் இருக்கும்.

அதே போல ஆந்திராவில் உள்ள பழமையான சிவலிங்கம் ஒன்றில் அதிக விலைமதிப்பு மிக்க வைரம் இருப்பதாகவும் அதனை எடுக்க வருபவர்களை பாம்பு ஒன்று விரட்டி தாக்குவதாக பரவிய கதையை உண்மை என்று நம்பி கொள்ளையடிக்க சென்ற கும்பல் ஒன்று கொலை குற்றத்தில் சிக்கி உள்ளனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபுரா மாவட்டம் கதிரி கோரி கோட்டா என்ற மலையடிவார கிராமத்தில் பழமையும் தொண்மையும் வாய்ந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது. இதன் அருகே பெரிய அளவிலான புற்றும் அமைந்துள்ளது.

கடந்த ஜீலை மாதம் 14 ஆம் தேதி இந்த கோவிலில் அர்ச்சகராக இருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவராம் ரெட்டி, உதவியாளர் கமலம்மா, சத்தியலெட்சுமி ஆகிய 3 பேரும் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்தனர். கோவில் முழுவதும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது.

3 பேரையும் நரபலி கொடுத்து சென்ற கும்பல் குறித்து விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர் புட்டபர்த்தியை சேர்ந்த அனுமந்த நாயக், ஸ்ரீகாந்த் நாயக், கணேஷ், வாசுதேவன், சீனிவாஸ் ஆகிய 5 பேர் கொண்ட மூன்றரை மாதங்களுக்குப் பின் கும்பலை சுற்றிவளைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் 3 பேரும் நரபலியிடப்படவில்லை என்றும் கொள்ளைக்காக நடந்த கொலைகள் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.

விரைவில் செல்வந்தராகும் ஆசையில் தொடர் குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்த இந்த கும்பலுக்கு கோரிகோட்டா கிராமத்தில் மலைபகுதியில் அமைந்துள்ள பழமையான கோயிலின் சிவலிங்கத்திற்குள் விலைமதிப்பு மிக்க வைரம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

மேலும் அந்த வைரத்தை எடுக்க பலர் முயன்றும் முடியாமல் போவதாகவும், அங்குள்ள பாம்பு ஒன்று கொள்ளையர்களை விரட்டி சென்று தாக்குவதாகவும் மரகத நாணயம் படத்தின் பாணியில் கதைவிட்டுள்ளான் கொள்ளையர்களில் ஒருவனான சீனிவாஸ்.

இதையடுத்து பாம்பை எதிர் கொள்ளவும் கச்சிதமாக வைரத்தை எடுத்து வரவும் திட்டமிட்டு , கையில் பெப்பர் ஸ்பிரே, 2 பாட்டில் விலங்கு ரத்தம், 5 கத்திகள், சுத்தியல் ஆகியவற்றுடன் அந்த சிவன் கோவிலுக்கு நள்ளிரவு சென்றுள்ளது இந்த கும்பல். அப்போது தூங்கிக் கொண்டிருந்த அர்ச்சகர் சிவராம் ரெட்டி சத்தம் கேட்டு விழித்துள்ளார்.

இதையடுத்து காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்று அவரையும் அருகில் படுத்துறங்கிய உதவியாளர் கமலம்மா, சத்தியலெட்சுமி ஆகியோரையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கோவிலுக்குள் நுழைந்துள்ளனர்.

பின்னர் கையில் கொண்டு வந்திருந்த விலங்கு ரத்தத்தை அருகில் இருந்த பாம்பு புற்றையும் கோவிலையும் சுற்றி தெளித்துள்ளனர். ரத்தவாடைக்கு பாம்பு வெளியே வராது என்று இந்த ஏற்பட்டை செய்துள்ளனர்.

தொடர்ந்து சுத்தியலால் சிவலிங்கத்தை உடைக்க முயன்றுள்ளனர். காலை வரை முயன்றும் சிவலிங்கத்தை அவர்களால் உடைக்க முடியவில்லை, கொள்ளையர்களை விரட்ட பாம்பும் அங்கு வரவில்லை.

இதனால் ஏமாற்றத்தோடு அந்த கொள்ளை கும்பல் தப்பிச்சென்றுள்ளது. அங்கு கிடைத்த தடயங்களை வைத்து இந்த கொலைகார கொள்ளை கும்பலை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்னமும் சினிமாவிலும், புராண கதைகளிலும் சொல்லப்படும் புதையல் ரகசியங்களை உண்மை என்று நம்பி ஊதாரியாக திரிந்தால் என்ன மாதிரியன விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments