வெற்றிக் கொடிகட்டு வேதம் ஓதியவர் கைது..! பணம் மோசடி புகார்

0 461

த்தே வாரத்தில் கொடுத்த பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி முகவர்களை நியமித்து 2000 பேரிடம் 10 கோடி ரூபாயை வாரிச்சுருட்டிய வெற்றிக் கொடிகட்டு மோசடி மன்னனை காவல்துறையினர் கைது செய்தனர். பிரமாண்ட மளிகை கடையை காட்டி ஊருக்கே மொட்டை போட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

வெற்றிக்கொடிகட்டு என்ற சினிமா பாடலுடன் போட்டோவை இணைத்து வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு அனுப்பி 10 வாரத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக மக்களின் ஆசையை தூண்டி 10 கோடி ரூபாயை வாரிச்சுருட்டிய நாககுப்பம் வெங்கடேசன் இவர் தான்..! 

கள்ளக்குறிச்சி அடுத்த சின்ன சேலத்தில் அனைத்து பொருட்களுடன் பிரமாண்டமாக லட்சுமி டிப்பார்ட்மண்டல் ஸ்டோர்ஸ் என்ற மெகா மளிகை கடையை தொடங்கியவர் வெங்கடேசன்.

கடை ஆரம்பித்த சில நாட்களிலேயே தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தான் பணத்தை பத்தே வாரத்தில் இரட்டிப்பாக்கி தரும் சீட்டு ஒன்று ஆரம்பித்திருப்பாதாக கூறி வாடிக்கையாளர்களை சீட்டில் சேர்த்துள்ளார்.

தன்னிடம் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 1000 ரூபாய் வீதம் 10 வாரம் வழங்கப்படும் என்றும் 10 வது வாரத்தின் இறுதியில் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார்.

முதலில் அரைகுறை நம்பிக்கையுடன் ஆயிர கணக்கில் வெங்கடேசனிடம் பணத்தை முதலீடு செய்தனர். ஒரு வேளை அவர் ஏமாற்றினால் மளிகைகடை இருக்கின்றது பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையால் பணத்தை கொடுத்து வந்தனர்.

வெங்கடேசன் ஒருவர் கட்டிய பணத்தை அடுத்தவருக்கு, மற்றொருவர் கட்டிய பணத்தை வேறொருவருக்கு என்று மாற்றி விட்டு 10 வாரத்தில் சொன்னபடி பணத்தை இரட்டிப்பாக்கி கொடுத்துள்ளார்.

இந்த தகவல் காட்டுதீயாய் பரவ, லட்சகணக்கில் பணத்தை கொட்டிக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து தனது முதலீட்டை மேலும் பெருக்கும் நோக்கத்துடன் கமிஷனுடன் முகவர்களை நியமித்துள்ளார் வெங்கடேசன். இதனால் சின்ன சேலம் மட்டுமில்லாது அக்கம்பக்கத்து கிராமங்களுக்கெல்லாம் சென்று லட்சகணக்கில் பணத்தை முதலீடாக பெற்றுள்ளனர்.

தன்னை ஒரு பெரிய தொழில் அதிபர் போல காட்டிக் கொண்ட வெங்கடேசன் வெற்றிக்கொடி கட்டு என்ற சினிமா பாடல் வரிகள் தான் நம் முன்னேற்றத்திற்கான படிக்கட்டுக்கள் என்று, தனது சொந்த தத்துவம் போல அள்ளிவிட்டதோடு, அந்த பாடல் பின்னணியில் அவரது புகைபடங்களை தொகுத்து வீடியோவாகவும் தயாரித்து வாட்ஸ் ஆப் குழுக்களில் பரப்பி உள்ளார்.

சுமார் 2000 பேரிடம் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் வசூலிக்கப்பட்ட நிலையில் பெரும் தொகை கொடுக்க வேண்டிய சிலருக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். அதே நேரத்தில் புதிதாக சீட்டில் பலரை இணைத்துள்ளார் வெங்கடேசன்.

கடந்த சிலவாரங்களுக்கு முன்பு இரவோடு இரவாக லாரியை கொண்டு வந்து மளிகை பொருட்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு கம்பியை நீட்டிய வெங்கடேசன், தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு ஒட்டு மொத்தமாக மொட்டை போட்டுவிட்டு தலைமறைவானார்.

அவருக்காக பலரிடம் முதலீட்டை பெற்றுக் கொடுத்த அவரது கூட்டாளிகளான அழகேசன், சுரேஷ் கண்ணா, செந்தில்குமார், செல்வம், சீனுவாசன் ஆகியோரும் செல்போனை சுவிட்ஜ் ஆப் செய்து விட்டு தப்பினர்.

பண இரட்டிப்பு திட்ட மோசடிக்கு மூளையாக இருந்த வெங்கடேசன் உள்ளிட்டவர்களை விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில் விழுப்புரம் மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் தேடிவந்த நிலையில், வெங்கடேசனையும், அவனது கூட்டாளி சுரேஷ் கண்ணாவையும், கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாடூர் டோல்கேட்டில் வைத்து சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அவர்கள் வந்த ஹூண்டய் ஐ 20 காரையும், 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் கைப்பற்றினர். முகவர்களாக இருந்து ஏமாற்றிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வங்கி வட்டிக்கு மேல் கூடுதலாக பணம் தருவதாக யார் அறிவித்தாலும் நம்பாதீர்கள், உங்களிடம் பெற்ற பணத்தை உங்களுக்கே சிறிது சிறிதாக கொடுத்து மொத்தமாக மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சீட்டுக்களில் முதலீடு செய்வதை பொதுமக்கள் தவிர்ப்பதே நலம்..! என்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments