தன்னுடன் பள்ளியில் படிக்கும் தோழியின் காதலுக்கு உதவிய மாணவி தற்கொலை

0 646

கள்ளக்குறிச்சி அருகே பக்குவம் இல்லாத வயதில் பெற்றோரால் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட  பள்ளி மாணவி, காதலுக்கு செய்த உதவியால் உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிபருவ காதல் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

கள்ளக்குறிச்சி அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் - கருப்பாயி தம்பதியின் மகள் அன்பு. அதே ஊரில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்புப் படித்து வந்த அந்தச் சிறுமிக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவருடன் பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்த ஒரே வாரத்திலேயே கணவன் ஜெகதீசன் வேலைத்தேடி சிங்கப்பூர் பறந்து விட, தனது தாய் கருப்பாயி வீட்டில் தங்கி கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்தார் அன்பு.

இந்நிலையில் புதன் கிழமை காலை வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் மகள் மயங்கிக் கிடந்ததைப் பார்த்தார் தாய் கருப்பாயி. உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் மாணவியைக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

வரஞ்சரம் போலீசார் நடத்திய விசாரணையில், காதலில் விழுந்த தோழிக்கு மாணவி அன்பு உதவியதே அவரது தற்கொலைக்கு காரணம் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அன்புவுடன் ஒன்றாக பள்ளியில் படிக்கின்ற பக்கத்து வீட்டு தோழியும், புக்கிரவாரியைச் சேர்ந்த தீனா என்ற இளைஞரும் காதலித்துள்ளனர்.

இவர்கள் பள்ளி பருவ காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அதற்கு அன்புவின் உதவியை நாடியதாககூறப்படுகிறது.

சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டதால், தாம்பத்ய வாழக்கை குறித்து முறையான புரிதல் இல்லாத அன்பு தனது தோழிக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பாமல், காதல் ஜோடியுடன் தன்னுடன் படிக்கின்ற மற்றொரு தோழியையும் அழைத்துக் கொண்டு 4 பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து தோழிக்கும் அவரது காதலனுக்கும் அன்பு திருமணத்தை நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

திருமணம் முடிந்த உடன் காதலனுடன் அந்த பக்கத்துவீட்டு தோழி தலைமறைவாகி விட, அன்புவும் அவரது மற்றொரு தோழியும் பேருந்தில் ஏறி தாமதமாக வீடு திரும்பியுள்ளனர். வீட்டில் தோழியின் பிறந்த நாள் விழாவுக்கு சென்று வந்ததாக கதை அளந்து விட்டுள்ளனர்.

பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும், தனது மகள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு தோழியின் தந்தை கேசவன் விசாரித்த போது அன்புவும், தனது மகளும் பள்ளியில் இருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்ற விவரம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கேசவன் அன்புவின் வீட்டிற்குச் சென்று தனது மகள் 18 வயது நிரம்பாத சிறுமி, அவள் உன்னுடன் வந்துள்ளாள், தற்போது அவளை காணவில்லை, போலீசில் புகார் செய்ய போகிறேன் அதற்கு காரணமான நீங்கள் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்று கேசவன் எச்சரித்ததாகச் சொல்லப்படுகிறது.

குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பது போல கேசவன் மிரட்டிச் சென்றதை எண்ணி உள்ளுக்குள் பயந்த அன்பு, இரவோடு இரவாக பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துக் கொண்டு படுக்கைக்கு சென்றுள்ளார். பக்குவமில்லாமல் அவர் எடுத்த அவசர முடிவு அவரது உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

அதே நேரத்தில் பெற்றோர் தங்கள் கடமை முடிந்தது என்று பக்குவம் இல்லா பள்ளி பருவத்தில் மாணவிக்கு திருமணம் செய்து வைத்ததால் அவளது சிந்தனைகளும் செயல்பாடுகளும் எத்தகைய விபரீதத்தை நோக்கிச் அழைத்துச் சென்றுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments