HIV பாதித்த தம்பதியின் குழந்தை விற்பனை

0 297

திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் எச்ஐவி பாதித்த தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தையை, கமிசன் பெற்றுக் கொண்டு விற்றுக் கொடுத்த வழக்கில் பெற்றோர் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். 

மணப்பாறையைச் சேர்ந்த எச்.ஐ.வி. பாதித்த தம்பதி, அந்த ஊரில் உள்ள அரசு மருத்துவமனை எதிரே பெட்டிக் கடை நடத்தி வந்தது. அப்போது அந்தோனியம்மாள் என்கிற மேரி அவர்களுக்குப் பழக்கமாகியுள்ளார்.

அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உதவி செய்து அவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்றுக் கொள்வது அந்தோனியம்மாளின் வழக்கம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எச்.ஐ.வி. தொற்றுள்ள தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், தீபாவளிக்கு சில நாட்கள் முன்னதாக மூன்றாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அவர்கள் வறுமையில் வாடுவதை அறிந்த அந்தோனியம்மாள் குழந்தையை விற்றுக் கொடுப்பதாகக் கூறவே, அதற்கு அந்தத் தம்பதியும் ஒப்புக் கொண்டது.

இதை அடுத்து 10 ஆண்டுகளாக குழந்தைப் பேறு கிடைக்காத ஒரு தம்பதிக்கு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு ஆண் குழந்தை விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மணப்பாறையில் உள்ள முனியப்பன் கோவிலில் வைத்து குழந்தை விற்கப்பட்டதாகவும், வெற்றுத் தாள்களிலும், முத்திரைத் தாள்களிலும் பெற்றோரிடம் இருந்து கையெழுத்து பெறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

குழந்தையை விற்றுக் கொடுத்தற்கு கமிசனாக 20 ஆயிரம் ரூபாயை அந்தோனியம்மாள் பெற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

குழந்தை விற்பனை தொடர்பாக, திருச்சி குழந்தைகள் நல அலுவலகத்திற்கு ரகசிய கடிதம் மூலம் புகார் செல்லவே, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அஜீமாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மணப்பாறை அரசு மருத்துவமனை சென்ற போலீசார் அந்தோனியம்மாளைக் கைது செய்தனர். அந்தோனியம்மாள் வேறு யாருக்கும் இதுபோல் குழந்தையை விற்றுக் கொடுத்துள்ளாரா? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments