சிறுவன், சிறுமி கடத்திக் கொலை- குற்றவாளிக்கு தூக்கு உறுதி

0 608

கோவையில் சிறுவன், சிறுமி கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 

கோவையை சேர்ந்த துணி வியாபாரி ஒருவரின் 11 வயது மகள் மற்றும் 8 வயது மகன் ஆகியோர் கடந்த 2010 ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி கடத்தப்பட்டனர். கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவர் அந்தக் குழந்தைகளைக் கடத்திச் சென்று தனது நண்பர் மனோகரன் உதவியுடன் கழுத்தை நெரித்தும், ஆனைமலை பி.ஏ.பி. கால்வாய் தண்ணீரில் மூழ்கடித்தும் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து மோகன் ராஜையும், மனோகரனையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இருவரையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்ற போது, தப்பி ஓட முயன்ற மோகன்ராஜ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கானது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2012ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கிய அந்த நீதிமன்றம், மனோகரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்தது. இதை எதிர்த்து மனோகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படவே 2014 ஆம் ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு அக்டோபர் 16ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்தநிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்ததுடன், மனுவை தள்ளுபடி செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments